மத்திய அரசு செஸ் வரியை கைவிட்டால் ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வர தமிழக அரசு ஆட்சேபணை தெரிவிக்காது என நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர அனுமதித்த பிறகு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், இந்த நடவடிக்கை பணவீக்கத்தை குறைக்க உதவும். இதனால் நாடு மற்றும் மக்கள் இருவருக்கும் உதவும் என்று அவர் கூறினார். “மாறிவரும் வரிவிதிப்பு சூழ்நிலையின் அடிப்படையில்” திமுக தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கூடுதல் வரி விதித்தது. அதன் வருவாயை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. கார்ப்பரேட் வரி குறைப்புகள் பெருநிறுவனங்களுக்கு உதவும்போது, அந்த வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்ய மக்கள் அதிக மறைமுக வரிகளைச் சுமக்க நேர்ந்தது. பெட்ரோல் டீசல் மீதான அதிக வரி அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்தது. மேலும் இரட்டைச் சுமையால் மக்கள் அவதிப்படுகின்றனர் என்றார்.
சமீபத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கூட, மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. கேரள உயர்நீதிமன்றம் ஒரு வழக்கு தொடர்பாக அளித்த தீர்ப்பில், பெட்ரோல், டீசல் விலையை ஏன் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரக்கூடாது என்பதை ஜிஎஸ்டி கவுன்சிலில் வைத்து அந்த முடிவை எங்களுக்கு தெரிவியுங்கள் என அமைச்சர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-said-tamilnadu-government-is-ready-to-rethink-fuel-under-gst-343771/