23 09 2021 ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024ல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: “ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்னும் திட்டமிடப்படவில்லை. 9 மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடக்கும்.” என்று கூறினார்.
கூட்டுறவு சங்கங்களில் நகை அடகு வைத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “கூட்டுறவு வங்கிகளில் அரசியல் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. எந்த ஆட்சியாக இருந்தாலும் வங்கி முறைகேட்டில் நடவடிக்கை எடுப்பார்கள். நான் முதலமைச்சராக இருந்தபோதுகூட சில வங்கிகளில் முறைகேடு நடைபெற்றது. கெங்கவல்லியில் கூட முறைகேடு நடைபெற்றது. அங்கே அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார்கள். அதுபோல, எங்காவது முறைகேடு நட்ந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அனைத்திலும் முறைகேடு நடைபெற்றதாக தெரியவில்லை. முறைகேடு நடந்ததாக சொல்கிறார்கள். எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்தது என்பது இதுவரை இன்னும் அறிவிக்கப்படவில்லை.” என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்வி பதிலளித்த பழனிசாமி, “திமுக தேர்தல் அறிக்கை என்றைக்கும் நிறைவேற்றியதாக வரலாறு இல்லை. முதல் கையெழுத்து நீட் ரத்து செய்வேன் என்று கூறிய ஸ்டாலின் அதை செய்யவில்லை. நாங்கள் போட்ட தீர்மானத்தையே அவர்களும் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளனர். கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையை நம்பி 43 லட்சம் பேர் காத்திருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. மு.க.ஸ்டாலின் தேசிய வங்கியில் நகை கடன் பெற்றவர்களுடையதும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். ஆனால், இப்போது, கூட்டுறவு சங்கங்களில் நகி கடன் பெற்றவர்களின் கடங்களை தள்ளுபடி செய்ய பல விதிகளை விதித்திருப்பதாக சொல்கிறார்கள்.” என்று கூறினார்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் சேர்ந்து வர வாய்ப்பிருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்படுகிறது. எனவே எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கை உயரும்போது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் உயரும். நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரே தேர்தலாக வர வாய்ப்பிருக்கிறது. ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் 8 பேர் மட்டுமே மருத்துவகல்வி பயின்ற நிலையில், 7.5 சத இட ஒதுக்கீடு அளித்த்தால் 435 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதே முறையை திமுக அரசும் பின்பற்றி இருக்கிறது என்றும் கூறினார்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “திமுகவில் 13 பேர் மீது சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதிமுகவை மட்டுமே ஊடகங்கள் பேசி வருகின்றன. ஆட்சியில் இருக்கும்போதும், இப்போதும் அதிமுகவை மட்டுமே குறிவைத்து செய்திகள் வெளியிடப்படுகின்றன. மக்கள் பிரச்சினையை எடுத்துச் சொன்னால் யாரும் வெளியிடுவதில்லை. சேகர் ரெட்டி டைரி குறிப்பில் 43 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக வெளியான தகவல் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது தொடர்பாக எந்த அதிகாரிகளும் சொல்லவில்லை தனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/edappadi-palaniswami-says-tamil-nadu-assembly-elections-may-come-with-lok-sabha-elections-2024-based-on-one-nation-and-one-election-344915/