திராவிட இயக்கத்தையும் திமுகவையும் விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதில் முன்னணியில் இருப்பவர் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். ஆனால், அவர் சமீபத்தில் தான் அளிக்கும் பதில் விமர்சனங்களுக்காக சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.
திமுக அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்த பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசியலில் தீவிரமாக இறங்கிய பிறகு, திமுகவின் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுபதில் முன்னணி வீரராக மாறினார். சமூக ஊடகங்களில் திமுக மீதான விமர்சனங்களுக்கு உடனுக்குடன் அவரது ஸ்டைலில் கிண்டலாகவும் கடுமையாகவும் பதிலளிப்பது வழக்கம்.
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சரான பிறகும், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சி தலைவர்களின் கேள்விக்கு சூடாகவும் கிண்டலாகவும் பதிலளித்து கவனத்தைப் பெற்றார்.
திராவிட இயக்கம் மற்றும் திமுக பற்றி விமர்சனங்களை முன்வைக்கும் எதிரிகளுக்கு, பிடிஆர் கருத்தியல் ரீதியாக சூடாக பதில் அளிப்பதாலேயே அவருக்கு திராவிட இயக்க ஆதரவு கருத்தியல்வாதிகள் நிறைய பேர் ஆதரவும் உள்ளது. அதே நேரத்தில், பிடிஆர் அமைச்சரான பிறகு, அவர் முன்பைப் போல எல்லோருக்கும் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்கக் கூடாது என்ற அறிவுரைகளும் முன்வைக்கப்படுகின்றன.
அண்மையில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொள்ளவில்லை. அமைச்சர் பிடிஆர் அவருடைய கொழுந்தியாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காகவே ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த விமர்சனங்களால் கோபமடைந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இல்லாத கொழுந்தியாள் வளைகாப்புக்கு செல்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று பொய் சொல்கிற முட்டாள்களே என்று கடுமையாக எதிர்வினை ஆற்றினார்.
அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜக மற்றும் அதிமுகவினரின் விமர்சனங்களுக்கு கோபத்துடன் கடுமையாக பதில் அளித்து வருகிறார். திமுகவில் இப்படி எந்த அமைச்சரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் போல, விமர்சனங்களுக்கு சமூக ஊடகங்களில் உடனுக்குடன் பதிலளிப்பது இல்லை.
இந்த சூழ்நிலையில்தான், திமுகவின் மூத்த தலைவரும் ராஜ்ய சபா எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து ஆத்திரமூட்டும்போது அவர் எளிதாக ஆத்திரமடைகிறார். அதனால், அவருக்கு கட்சி தலைவர் அவருக்கு அறிவுரை வழங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்து திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவனின் கருத்து திமுகவில் மட்டுமல்ல திமுகவுக்கு வெளியேயும் விவாதமானது. எல்லாவற்றுக்கும் உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பதிலடி கொடுக்கும் அமைச்சர் பிடிஆர், திமுகவின் மூத்த தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் தன்னைப் பற்றி தெரிவித்த கருத்துக்கும் உடனடியாக ட்விட்டரில் எதிர்வினையாற்றினார். பிறகு, அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார்.
டி.கே.எஸ் இளங்கோவனின் விமர்சனம் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரை மறைமுகமாக சாடி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “கட்சியின் இரண்டு முக்கிய தலைவர்களால், இரண்டு முறை கட்சி பொறுப்பு பறிக்கப்பட்ட ‘வயதான முட்டாளை’ அழைத்து, என்னை பற்றி பேசச் சொல்லி உளற வைத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டு கிலோ இறால் கொடுத்து வாங்கும் அளவுக்கு தகுதியுள்ளவர்தான் அவர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ் இளங்கோவனை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு கடுமையாக சாடியிருப்பது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநிலத்தின் நிதி அமைச்சர், எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் பொறுமையாக இருக்க வேண்டும். இப்படி ஆத்திரப்பட்டு எதிர்வினையாற்றக்கூடாது என்று எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல் திமுகவினரே விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-ptr-palanivel-thiagarajan-slams-dmk-senior-leader-tks-elangovan-controversy-346092/