Vaiko Thirumavalavan and other Social activists condemn Naam Tamilar on Prof Jeyaraman : மீத்தேன் உள்ளிட்ட மக்கள் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியவர் பேராசிரியர் ஜெயராமன். இவருக்கு, நாம் தமிழர் கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக வைகோ, தொல் திருமாவளவன், பாலகிருட்டிணன், முத்தரசன் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ‘தமிழ்த்தேசத்தின் எதிரி யார்?’ என்ற தலைப்பில் சென்னையில் தமிழ்த்தேசிய நடுவம் என்ற அமைப்பு நடத்திய கருத்தரங்கம் ஒன்றில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உரையாற்றினார். அப்போது, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தமிழ் தேசியம் குறித்த விரிவான உரையை ஜெயராமன் பேசியிருக்கிறார். அந்த உரை நாம் தமிழர் கட்சிக்கு ஏற்புடையதாக இல்லை என்றும், அவர்களுடைய அரசியலை அவை பாதிக்கக் கூடியதாக இருப்பதாக அவர்கள் கருதுவதாகவும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ மணியரசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் உரைகளுக்கு விடையளித்தும் மேலும் தேவையான விளக்கங்கள் கொடுத்ததும் ஜெயராமன் உரையாற்றினார்.
வட இந்தியாவில் சங்கிகள் நடத்தையை அப்படியே மறு உருவமாகப் பின்பற்றுபவர்கள்தான் நாம் தமிழர் கட்சியினர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள், பேராசிரியர் ஜெயராமன் அவர்களையும் அவருடைய குடும்பத்தையும் மிக மிகக் கீழ்த்தரமானச் சொற்கள் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளனர். அதன் இறுதிக் கட்டமாக, நாம் தமிழர் கட்சியினை சேர்ந்த 8 பேர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் மாணவர் இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளரான மயிலாடுதுறையில் வசிக்கும் செல்வராசன் கடைக்குச் சென்று ‘ஆபாசமாக’த் திட்டியது மட்டுமல்லாமல் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, மயிலாடுதுறையில் இருக்கும் பேராசிரியர் வீட்டுக்குப்போய் ‘என்ன செய்கிறோம் பார்! ‘ என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். அப்போது, வெளியூர் சென்றிருந்த பேராசிரியர் ஜெயராமன் ஊர் திரும்பிக் கொண்டு இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நடந்தவற்றைக் கேள்விப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் எஸ்டிபிஐ கட்சியினரும் இணைந்து, மிரட்டல் விடுத்த கடைக்குச் சென்று அங்கு நடந்தவற்றைக் கேட்டறிந்துகொண்டு, பிறகு காவல் நிலையம் சென்றிருக்கின்றனர். குற்றச்செயலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் மற்றும் உடன் வந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதனை அடுத்து, தங்கள் மீது புகார் அளித்ததைக் கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியினர், அதே காவல் நிலையம் சென்று பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கும் மற்றவர்கள் மீதும் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், ஏற்கெனவே குற்றச் செயலில் ஈடுபட்டதாகப் புகார் அளித்தவர்கள் மீது எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல், அவர்கள் அளித்த புகாரையும் காவல் துறையினர் வாங்கிப் பதிவு செய்து கொண்டனர். காவல்துறையினரின் இதுபோன்ற செயல், ஒரு சார்பு போக்கையே காட்டுகிறது.
அரசு ஊழியர் ஒருவர் தனது சொந்த சார்பு நிலையை அரசுப்பணியில் உட்செலுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பெரும் குற்றம். இதேபோன்ற செயல்பாடு சேலம் மாவட்டம் மோரூர் என்ற ஊரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியைப் பொது இடத்தில் எல்லா கட்சிக் கொடிகளும் உள்ள இடத்தில் நாட்டும்போதும் அதை எதிர்த்துச் சாதியப் போக்குடையோரால் சிக்கல் நடந்திருக்கிறது. காவல்துறை முன்னிலையிலேயே கற்கள், பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தியதைக் காவல்துறையினர் தங்கள் கண்களால் பார்த்த பின்னரும், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரோடு, கற்கள் பாட்டில்கள் வீசியவர்களிடம் இருந்து ஒரு புகாரினைப் பெற்று, கற்கள் வீசிய தரப்பில் 18 பேர்கள் மீதும், காயம்பட்டோர் தரப்பில் 27 பேர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து தளைப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட வன்முறை போக்குகளையும் சாதியப் போக்குகளையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்குக் காவல் துறையினரின் கவனமற்ற, குற்றமிழைப்போருக்குச் சார்பான நடவடிக்கைகளைக் கண்டிக்கிறோம்.
பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் பணி நிறைவு பெற்ற பேராசிரியர் மட்டுமல்ல, காவிரி கடைமடைப் பகுதிகளுக்காகத் தன்னுடைய முழு உழைப்பையும் செலுத்தி வருபவர். மேலும், மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டு வருபவர். மக்களிடம் செல்வாக்கு மிக்கவர். அவரையே இப்படி மிரட்டவும் இழித்துப் பேசவும் செய்த நாம் தமிழர் கட்சியினரின் போக்கு வடநாட்டில் அடாவடித்தனமாய்ச் செயற்படும் ஆர் எஸ் எஸ் குண்டர்களின் தன்மையை ஒத்தது.. இது முற்றிலும் குடி நாயக முறைக்கு எதிரானது. எனவே, இப்போக்குகள் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடாத வகையில் அந்நிகழ்வை வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசினையும், காவல்துறை தலைமையினையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-thirumavalavan-and-other-social-activists-condemn-naam-tamilar-on-prof-jeyaraman-348613/