சென்னையை அடுத்துள்ள குயின்ஸ்லேண்ட் நிலம் சட்டப் போராட்டம் நடத்தி கோயில் நிலம் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்புகள் குறித்து அனைத்து அலுவலர்களுடன் அமைச்சர் சேகர்பாபு செப்டம்பர் 23ம் தேதி ஆலோசனை மெற்கொண்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, இந்து அறநிலையத் துறையின் சார்பில் 112 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதில் 5 நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக் கூறினார். ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார்.
அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “10.08.2021 அன்று அந்த நிலம் அனாதீனம் என்று எங்களுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இருந்தாலும், வருவாய்த்துறை எங்களுடைய இடம் இல்லை என்று சொன்ன பிறகும்கூட, மறுபடியும் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, இன்னும் ஒரு வார காலத்திற்குள்ளாக, அந்த இடம் கோயிலுக்கு உண்டானது என்பதை மேல்முறையீடு செய்ய உள்ளோம். ஆகவே, ஆக்கிரமிப்பில் இருக்கிற எந்த இடமாக இருந்தாலும் சரி, அந்த இடம் திருக்கோயிலுக்கு சொந்தமானது என்றால், தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை தயாராக இருக்கிறது.
கோவில்கள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜீ, மதுரை மண்டலத்துக்கு நீதிபதி ஆர்.மாலா, திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவிசந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். காணாமல் போன சிலைகளை மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை லயோலா கல்லூரி இடம் கோவிலுக்கு சொந்தமான நிலம் இல்லை. குயின்ஸ்லேண்ட் பூங்கா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலம் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலசாமி கோவிலுக்கு சமுத்திரமேடு கிராமத்தை சேர்ந்த உதயகிரி சாமைய்ய ஜமீன்தாரின் மகன் வெங்கைய்யா என்பவர் கோவிலின் பூஜை பராமரிப்பு பணியை தொடர்ந்து நடத்துவதற்கு சொத்துக்களை உயில் சாசன ஆவணம் எழுதி பதிவு செய்துள்ளார்.
அதன்பின்பு பல்வேறு காரணங்களால் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன்மீது இன்னும் ஒரு வாரத்தில் வல்லுனர்களிடம் ஆலோசித்து சட்டப்போராட்டம் நடத்தி அது கோவில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-sekarbabu-says-govt-will-legal-fight-to-secure-queensland-park-as-temple-land-346136/