ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவரும் ஐதராபாத் எம்.பி-யுமான அசாதுதீன் ஓவைசியின் டெல்லி இல்லம் தாக்கப்பட்டது தொடர்பாக இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த 5 பேரும் வடகிழக்கு டெல்லியின் மண்டோலி பகுதியில் வசிப்பவர்கள் என்று புதுடெல்லி மாவட்டத்தின் டிசிபி தீபக் யாதவ் கூறினார். டெல்லியில் உள்ள அசாதுதீன் ஓவைசியின் வீடு செவ்வாய்க்கிழமை தாக்கி சேதப்படுத்தப்பட்டது.
புது டெல்லி மாவட்டம் அசோகா சாலையில் அமைந்துள்ள அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹதுல் முஸ்லீம் (AIMIM) கட்சி தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசியின் வீட்டை சேதப்படுத்தியதாக கூறி இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
வடகிழக்கு டெல்லியின் மண்டோலி பகுதியில் வசிக்கும் அந்த 5 பேரை கைது செய்து வைத்துள்ளதாக புது டெல்லி மாவட்ட டிசிபி தீபக் யாதவ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் உறுதிப்படுத்தினார்.
“நாங்கள் அவர்களை அந்த இடத்திலிருந்து கைது செய்து வைத்துள்ளோம். ஆரம்ப விசாரணையின்போது அவர்கள் அவருடைய கருத்துக்களால் கோபமடைந்ததாக கூறினர். நாங்கள் அவர்களை விசாரித்து வருகிறோம்” என்று டிசிபி தீபக் யாதவ் கூறினார்.
ஓவைசியின் டெல்லி வீட்டை சிலர் நாசப்படுத்துவதாக பிசிஆர் அழைப்பு வந்ததை அடுத்து இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. “இது குறித்து தகவல் தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் அந்த இடத்தில் கைது செய்தனர். போலீசார் அங்கே வந்தபோது, அவர்கள் ஓவைசி வீட்டின் நுழைவு வாயில் மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்திக் கொண்டிருந்தனர்” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.