பீகாரில் அனைத்து வீடுகளுக்கும் குழாய்களில் குடிநீர் என்ற திட்டத்தில் துணை முதலவர் பிரசாத் குடும்பத்துக்கு ரூபாய் 53 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக நமது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புகையில், டெண்டர் விடப்படத்தில் முறைகேடு நடந்தது தொடர்பான புகார்கள் வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகுதியில் மற்றொரு துணை முதல்வர் ரேணு தேவியின் இல்லத்தில் பொதுச் செயலாளர் பிகுபாய் தல்சானியா உள்ளிட்ட பாஜக மாநிலத் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் பிரசாத் பங்கேற்றார். இக்கூட்டத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நமது தளத்துடன் பேசிய PHED துறை அமைச்சர் ராம் ப்ரித் பாஸ்வான், ” இவ்விவகாரத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். அரசியல்வாதிகளின் நண்பர்கள், உறவினர்கள் டெண்டர் முறை மூலமாகே அரசு ஒப்பந்தத்தை எடுத்திருந்தாலும், அதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் வரும் பட்சத்தில், அந்த டெண்டர் செயல்முறையை மீண்டும் ஆய்வு செய்வோம். டெண்டர் விருப்பமானவர்களுக்கு வழங்கப்பட்டது போன்ற புகார்கள் வந்திருக்கா என்பதையும், துறைச் செயலரிடம் பார்வையிட அறிவுறுத்தியுள்ளேன்” என்றார்.
இந்த ஊழலைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகியவை பிரசாத்தை ராஜினாமா செய்ய வலியுறுத்திய நிலையில், பாஸ்வனின் பதில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், இந்த ஊழல் குற்றச்சாட்டில் துணை முதல்வர் பிரசாத் மீது முதல்வர் நிதிஷ்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர், ” இந்த அரசாங்கம் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது. நிதிஷ்குமார் அவ்வப்போது இந்த திட்டப் பணிகள் குறித்து கண்காணிப்பதாகக் கூறுவார். ஆனால் அவரால் தனது துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? தற்போது நிதீஷ் குமார் மற்றவர்களின் கருணை அடிப்படையில் முதல்வராக உள்ளார். அதனால், என்டிஏ தலைவர்கள் மீது அவரால் நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா, இது ஒவ்வொரு தலைவருக்குமான ஒப்பந்தம் திட்டம்” என்றார்.
மேலும் அவர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையின் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிட்டு, தர்கிஷோர் பிரசாத் உடனடியாக பதவி விலக வேண்டாமா? ஜே பி நட்டா உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தக்கூடாதா? (பிரதமர்) மோடிஜியும் (மத்திய உள்துறை அமைச்சர்) அமித் ஷாஜியும் இந்த ஊழலுக்கு எதிராக முன் வந்து பேசக்கூடாதா? ஏன் (முதல்வர்) நிதிஷ்குமார் அமைதியாக இருக்கிறார்? போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
“தர்கிஷோர் பிரசாத் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று சுர்ஜேவாலா கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/prasad-took-part-in-a-meeting-of-top-bjp-state-leaders/