புதன், 29 செப்டம்பர், 2021

வீட்டைவிட்டு வெளியே நடமாடுவதாகத் தகவல் கிடைத்தால், உடனடியாக வீட்டு தனிமை ரத்து செய்யப்பட்டு

 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் வேகம் கட்டுக்குள் இருந்தாலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. தலைநகர் சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரத்து 270 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் 8 ஆயிரத்து 467 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பிலிருந்து 5 லட்சத்து 38 ஆயிரத்து 745 பேர் குணமடைந்து விட்ட நிலையில், தற்போது 2 ஆயிரத்து 58 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர். ஒரே தெருவில் 3க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று பாதிப்பு இருந்தால், அந்த தெருவை கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது 110 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளன.

கொரோனா பாதிப்பால் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களால், குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று பரவுவதாகக் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத் துறை அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆலோசனை நடத்தினர்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதித்தவர்கள் இனி வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கக்கூடாது. உடனடியாக, மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர வேண்டும் என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

புதிய உத்தரவின்படி, கொரோனா பாதித்தவர்கள் கட்டாயம் 14 நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். கட்டாயமாக வீட்டு தனிமை வேண்டுவோர்கள் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் நேரடியாக வீட்டில் ஆய்வு மேற்கொண்டு தனியறை, கழிப்பறை போன்ற கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்தபிறகு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். அவர்கள், வீட்டைவிட்டு வெளியே நடமாடுவதாகத் தகவல் கிடைத்தால், உடனடியாக வீட்டு தனிமை ரத்து செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/no-more-home-quarantine-says-by-chennai-corporation-commissioner/