1 1 2022ஒமிக்ரான் தொற்றின் கூடாரமாக மாறிவரும் மகாராஷ்டிராவில், 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் பரவத் தொடங்கிய ஒமிக்ரான் தொற்று குறைந்த நாட்களிலேயே 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளது. இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தான் ஒமிக்ரான் பாதிப்பு முதலிடத்தில் உள்ளது. இதுவரை 454 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மாநிலத்தில் பதிவாகும் தினசரி பாதிப்பும் உச்சத்தில் உள்ளது. நேற்று மட்டும் 8 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அண்மையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாள்கள் எண்ணிக்கையை குறைத்தோம். இதுவரை 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு, பிறந்தநாள் மற்றும் பிற நிகழ்வுகளின் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக இருக்க அனைவரும் விரும்புகிறார்கள். புதிய மாறுபாடு (ஓமிக்ரான்) வேகமாக பரவுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எச்சரிக்கை அவசியம். நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். கடுமையான கட்டுப்பாடுகளைத் தவிர்க்க, அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.
மும்பையில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகளில் 55 சதவீதம் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிஎம்சி தெரிவித்துள்ளது. ஒமிக்ரானின் சமூக பரவல், மகாராஷ்டிராவில் மூன்றாம் அலையை தொடங்குவதற்கான ஆதாரமாக விளங்குவதாக கூறுகின்றனர்.
இதற்கிடையில், ஜனவரி 15 ஆம் தேதி தினமும் மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை கடற்கரைகள், திறந்தவெளிகள், கடல் முகங்கள், நடைபாதைகள், தோட்டங்கள், பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல 144 தடை உத்தரவை காவல் துறை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது
source https://tamil.indianexpress.com/india/more-than-10-ministers-and-20-mlas-in-maharashtra-have-tested-positive-for-coronavirus-391121/