ஞாயிறு, 2 ஜனவரி, 2022

ஹரியானா மாநிலத்தில் நிலச்சரிவு; சுரங்கத் தொழிலாளர்கள் நிலை என்ன?

 ஹரியானாவின் பிவானி ம்மாவட்டத்தில் உள்ள தோஷம் பகுதியில் அமைந்துள்ளது டாடம் சுரங்கப் பகுதி. இந்த பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை என்பது தொடர்பாக இன்னும் அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய தோஷம் எம்.எல்.ஏ. கிரண் சவுத்ரி, சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை என்னவென்று இதுவரை தெரியவில்லை. எனக்கு கிடைத்த தகவல்களின் படி இதுவரை நான்கு தொழிலாளிகள் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். இந்த பகுதியில் பசுமை தீர்பாயத்தின் உத்தரவிற்கு பிறகு சுரங்க பணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்று கூறினார்.

மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கும் இதற்கு ஒரு முக்கிய காரணம். நான் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றேன். தற்போது தான் அவர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க விதிமுறைகள் படி இங்கே சுரங்கப்பணிகள் நடைபெறவில்லை என்று அவர் குற்றம் சுமத்தினார். இதன் காரணமாக தான் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜே.பி. தலால் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்டு வருகிறார். சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிலர் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவக் குழு அங்கே வரவைக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைத்து வழிகளிலும் மக்களை பாதுகாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மாவட்ட நிர்வாகமும் பேரிடர் மீட்புக் குழுவும் இங்கே பணியமர்த்தப்பட்டுள்ளது. இடர்பாடுகளை நீக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தலால் கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/several-feared-dead-after-landslide-in-haryanas-mining-zone-391206/