சனி, 1 ஜனவரி, 2022

ஒருவரால் 34 மாணவர்களுக்கு பரவிய கொரோனா… நீட் பயிற்சி மையத்தில் அதிர்ச்சி

 

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவரை 120 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீட் பயிற்சி மையம் ஒன்றில், 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் பயிற்சி மையத்தில் மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். முதலில் ஒரு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. சுமார் 90 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொற்றால் பாதித்த 34 பேரில் 32 பேர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர், கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசின் அண்ட் ரிசர்ச் நிறுவனத்திற்கும், மற்றொருவர் தனியார் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஈஞ்சம்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “அனைத்து மாணவ-மாணவிகளும் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார்கள். டெல்டா,ஒமிக்ரான் வகைகள் இரண்டும் இணைந்து உலகளவில் வேகமாக பரவி வருகின்றன. எனவே, தடுப்பூசி போடுவதற்கு யாரும் தயங்கக் கூடாது.

இதுவரை 86 சதவீதம் பேருக்கு முதல் டோஸும் 58 சதவீதம் பேருக்கு இரண்டாம் டோஸும் போடப்பட்டுள்ளது. புள்ளி விவரங்களை பார்கையில்,பலரும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் 17-வது மெகா தடுப்பூசி முகாமில் மாநிலம் முழுவதும் சுமார் 50,000 முகாம்கள் அமைக்கப்படும்.

சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் உள்ள நிலையில், 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. டெல்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு பிறகு தான், இரண்டாம் சோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வரும்.

ஆனால், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோருக்கு நான்கு நாள்களில் மீண்டும் சோதனை நடத்தினாலே நெகட்டிவ் ரிசல்ட் வருகிறது.

வெள்ளிக்கிழமை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து 25 ஓமிக்ரான் நோயாளிகள் இரண்டு முறை பரிசோதனை செய்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/34-students-of-neet-coaching-centre-in-saidapet-test-corona-positive-391015/