தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையைப் புறக்கணித்து எதிர்க்கட்சி அதிமுக உறுப்பினர்களும் திமுக கூட்டணி கட்சியான விசிக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். விசிக உறுப்பினர்கள் ஏன் சட்டப் பேரவை கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பதற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் விளக்க அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. இதற்கு முன்பு, சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தட்டு மூலம் இசைக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை சென்னை இசைக்கல்லூரியின் இசைக் கலைஞர்கள் நேரடியாக பாட கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபின், சபாநாயகர் மு. அப்பாவு உள்ளிட்டோர், கவர்னரை அவைக்கு அழைத்துச் சென்றனர்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின் நடைபெறும் சட்டப் பேரவைக்கூட்டம் என்பதால், சட்டப் பேரவையில் அவர் உரையாற்றினார். ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலின் கொரோனா இரண்டாம் அலையின்போது சிறப்பாகச் செயல்பட்டு மாநிலத்தில் தொற்றின் வீரியத்தைக் கட்டுப்படுத்தியதாகப் பாராட்டினார். கொரோனாவால் உயிரிழந்த 27,432 பேரின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரண நிதியை அரசு வழங்கியுள்ளதாகவும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று புகழாரம் சூட்டினார்.
ஆளுநர் உரையின்போது விசிக சட்டமன்றக் குழு தலைவர் எம்.சிந்தனைச்செல்வன் பேசுவதற்கு முன்பட்டார். அதே போல, எதிர்க்கட்சி தலைவர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தயார் செய்துவந்திருந்த தனது உரையைப் படிக்கத் தொடங்கினார். இருவருமே பேசுவதற்கு அனுமதி அளிக்கபடவில்லை. இதையடுத்து, இரண்டு கட்சி உறுப்பினர்களும் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநரின் முதல் உரையை புறக்கணித்து தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையைத் தொடங்கும்போது, விசிக அவைத் தலைவரும் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ.வுமான மு. சிந்தனைச்செல்வன் எழுந்து பேச முயன்றார். ஆனால், சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிந்தனைச்செல்வன் தனது கட்சி உறுப்பினர்களை வெளிநடப்பு செய்வதற்கு முன் தனது கருத்துக்களை தெரிவித்தார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததை எதிர்த்து விடுதலை சிறுத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் கவனர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார்.
அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் எழுந்து பேச அனுமதிக்காவிட்டாலும், தயார் செய்யப்பட்ட தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். ஆளுநர் ஆற்றிய உரையை கேட்காமல், பழனிசாமி தனது உரையை சில நிமிடங்கள் தொடர்ந்து வாசித்தார். அதிமுகவின் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில், அதிமுக, விசிக ஆகிய இரு கட்சி உறுப்பினர்களும் ஆளுநரின் உரையை முழுமையாகப் புறக்கணித்தனர். எதிர்க்கட்சியான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், திமுக கூட்டணியில் உள்ள விசிக ஏன் வெளிநடப்பு செய்தது என்று தமிழக அரசியல் களத்தில் கேள்வியை எழுப்பியது.
இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநரின் தமிழக விரோதப் போக்கைக் கண்டித்து இன்று ஆளுநர் உரையின் போது விசிக வெளிநடப்பு செய்தனர்.
நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் என கண்டித்து வெளிநடப்பு செய்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/vck-aiadmk-mlas-walkout-of-tn-assembly-boycott-governors-speech-in-house-392968/