வெள்ளி, 7 ஜனவரி, 2022

இந்தியாவில் முதல் ஒமிக்ரான் மரணம் பதிவு

 6 1 2022 ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் 2 முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 73 வயது முதியவர் ஒமிக்ரான் பாதிப்பால் உதய்பூர் மருத்துவமனையில் டிசம்பர் 31ம் தேதி இறந்தார்.

உயிரிழந்த முதியவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை மரபணு பரிசோதனை செய்ததில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதல் ஒமிக்ரான் மரணம் பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் ராஜஸ்தானின் உதய்பூரில் இறந்த நபரின் மாதிரிகள் பரிசோந்தனை செய்யப்பட்டதில் கோவிட் -19 வைரஸின் திரிபான புதிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா முதல் ஒமிக்ரான் மரணத்தை புதன்கிழமை பதிவு செய்தது.

முதல் ஒமிக்ரான் மரணத்தை உறுதி செய்துள்ள மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், “ராஜஸ்தானில் ஒமிக்ரான் தொடர்பான மரணம் பதிவாகியுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பால் இறந்தவர் ஒரு முதியவர். அந்த நபருக்கு நீரிழிவு போன்ற நோய்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

அந்த முதியவர் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகியவற்றுடன் இணை நோய்கள், கோவிட் நிமோனியா காரணமாக அவர் இறந்தார் என்று உதய்பூர் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் தினேஷ் கரதி கூறினார்.

முதியவருக்கு டிசம்பர் 15ம் தேதி கோவிட்-19 உறுதி செய்யப்பட்டு, காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் இருந்து டிசம்பர் 25 ஆம் தேதி பெறப்பட்ட பெறப்பட்ட மாதிரிகளை மரபணு பரிசோதனை செய்ததில், அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் தற்போது கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஒரே நாளில் 58,097 கோவிட் -19 தொற்றுகள் அதிகரித்தன. நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ) கோவிட் பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கருத்துப்படி, இந்தியா ஏற்கனவே கோவிட்-19 தொற்றுநோயின் மூன்றாவது அலையை தொட்டுவிட்டதாகக் கூறினார்.

கொரோனா வைரஸின் திரிபான ஓமிக்ரான் வைரஸால் தொற்றுகள் அதிகரித்துள்ளது. இதில் இந்தியாவில் தற்போது 2,135 ஒமிக்ரான் தொற்றுகள் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 8 நாட்களில் இந்தியாவில் கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6.3 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று அரசாங்கம் கூறியுள்ளது, அதே நேரத்தில் டிசம்பர் 29ம் தேதி 0.79 சதவீதத்தில் இருந்து ஜனவரி 5ம் தேதி 5.03 சதவீதமாக தொற்று அதிகரித்து காணப்படுவதாகக் கூறியுள்ளது.

மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் கோவிட் -19 தொற்று அதிகரிப்பு காரணமாக கவலைக்குரிய மாநிலங்களாக உருவெடுத்துள்ளன என்று கூறியுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், நாட்டிலுள்ள 28 மாவட்டங்கள் புதிய தொற்றுகள் வாரத்திற்கு 10%க்கும் அதிகமாகவும், 43 மாவட்டங்களில் வாரத்திற்கு புதிய தொற்று 5-10% வரையிலும் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/india/india-records-first-omicron-death-393033/