வெள்ளி, 6 மே, 2022

கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு

 சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் வெயில் சதத்தைத் தாண்டியுள்ளது. இதனால், வயதானவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு மே மாதத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என எம்.பி.ஏ. எனப்படும் மெட்ராஸ் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.பி.ஏ. கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி விலக்கு அளித்துள்ளதாக தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், கருப்பு கோட் மற்றும் கழுத்துப் பட்டை அணிவது கட்டாயம் என்றும் அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

source https://news7tamil.live/excemption-for-lawyers-from-wearing-gown-chennai-high-court-order.html