1 5 2022
Can’t met CM; Ex MLA BalaBharathi tweet goes controversy: திண்டுக்கல் வருகையின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுப்பதாக முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது சர்ச்சையான நிலையில், பாலபாரதியைத் தொடர்பு கொண்டு ஸ்டாலின் போனில் பேசியதை அடுத்து, சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல்லில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட ஸ்டாலின், தமிழ்நாட்டை தலை நிமிர வைக்க உழைக்கிறேன், சிலர் மாநிலங்களை முடக்குவதாக நினைத்து மக்களை முடக்குகின்றனர் என்று உரையாற்றினார்.
இந்தநிலையில், திண்டுக்கல் சிபிஎம் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதியின் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு சர்ச்சையானது. பாலபாரதி தனது பதிவில், திண்டுக்கல் வருகை புரிந்த தமிழக முதலமைச்சர் அவர்களை சந்திப்பதற்கு எத்தனை முயற்சி செய்தும் முடியவில்லை. டாணாக்காரர்கள் நடத்திய நாடகம், சுவாரசியமானது. ஏப்பா எங்ககிட்டேயாவா? என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பரவி சர்ச்சையான நிலையில் பாலபாரதி மற்றொரு பதிவை வெளியிட்டார். அதில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசியது மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வழங்கியது. நன்றியும் வாழ்த்துகளும்.. என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, ஒரு சிலர் விமர்சனங்கள் செய்த நிலையில், கோபத்துடன் எழுதிய பதிவை மட்டும் பாலபாரதி நீக்கினார்.
முன்னதாக, பாலபாரதியின் இந்த பதிவு முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து பாலபாரதியை போனில் தொடர்பு கொண்ட ஸ்டாலின், ஏன் என்னாச்சு? யார் சந்திக்க விடாமல் தடுத்தாங்க? என கேட்டிருக்கிறார். அப்போது சில அதிகாரிகள் குறித்து பாலபாரதி விவரித்திருக்கிறார். உடனே ஸ்டாலின், நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். யாரும் தடையாக இருக்க மாட்டார்கள் என உறுதி அளித்திருக்கிறார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cant-met-cm-ex-mla-balabharathi-tweet-goes-controversy-448271/