2 5 2022
இந்தியாவில் கல்வி, பாடப்புத்தகங்கள் அனைத்தும் காவி மயமாகி வருவதாக திமுக மாணவரணி மாநாட்டில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில், திமுக மாணவரணி சார்பில் கல்வி – சமூக நீதி குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கேரளா மாநில தொழில் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ராஜீவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, கேரளா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் குமார், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி, அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான கன்னையா குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் 7 கோடி மக்களையும் ஆளுநர் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டினார். இதர மாநிலங்களும் ஒன்றிணைந்து நீட் தேர்வுக்கு எதிராக போராட வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், கல்வியை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது என குறிப்பிட்டார். இந்தி, சமஸ்கிருத திணிப்பு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என தெரிவித்த அவர், நீட் தேர்வு ஒழிக்கப்படும்வரை திமுக தொடர்ந்து போராடும் என்று உறுதியளித்தார்.
source https://news7tamil.live/textbooks-are-all-saffron-trinamool-congress-mp.html