திங்கள், 2 மே, 2022

வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்’ – மத்திய அரசு எச்சரிக்கை

 வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு உட்பட நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வெயிலின் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள அவர், வெயிலின் பாதிப்புகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

அதேபோல, நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், வெப்பத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளை தினசரி கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கடந்த சில வாரங்களாக வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான வெப்பநிலை எனகுறிப்பிட்டுள்ளார்.

source https://news7tamil.live/weils-impact-will-increase-further-federal-government-warns.html