31 12 2022
பா.ஜ.க.,வை கிண்டல் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அதிகாரத்தில் இருக்கும் போது செய்யக் கூடாதவற்றைத் தொடர்ந்து நினைவூட்டுவதால் பா.ஜ.க கட்சியை தனது குருவாகக் கருதுவதாகக் கூறினார்.
“அவர்கள் (பா.ஜ.க) எங்களை ஆக்ரோஷமாக தாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தைப் புரிந்துகொள்ள உதவும். அவர்களை (பா.ஜ.க) என் குருவாகக் கருதுகிறேன். அவர்கள் எனக்கு வழி காட்டுகிறார்கள், என்ன செய்யக்கூடாது என்று எனக்கு பயிற்சி அளிக்கிறார்கள்,” என்று வயநாடு எம்.பி.,யான ராகுல் காந்தி புதுதில்லியில் உள்ள AICC தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கியபோது, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான சாதாரண பயணமாகவே கருதியதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, “இந்த யாத்திரைக்கு குரல் மற்றும் உணர்வுகள் உள்ளன என்பதை மெதுவாகப் புரிந்துகொண்டோம். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்தவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், ஏனென்றால் அவர்கள் எங்களை எவ்வளவு அதிகமாக குறிவைக்கிறார்களோ, அது ஏதோ ஒரு வகையில் நமக்கு உதவுகிறது” என்று கூறினார் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“பாரத் ஜோடோ யாத்ராவின் கதவுகள் அனைவருக்கும் திறந்திருக்கும். யாரும் எங்களுடன் இணைவதை நாங்கள் தடுக்கப் போவதில்லை. அகிலேஷ் ஜி, மாயாவதி ஜி மற்றும் பலர் “மொஹபத் கா ஹிந்துஸ்தான் (அன்பான இந்தியா)” வேண்டும் என்று விரும்புகிறார்கள், மேலும் எங்களுக்கு இடையே சித்தாந்தத்தின் சில உறவுகள் உள்ளன,” என்று ராகுல் காந்தி கூறினார்.
“பாரத் ஜோடோ யாத்ராவில் ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸுடன் இருக்கிறார்கள், ஆனால் சில அரசியல் நிர்ப்பந்தங்கள் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். பா.ஜ.க.,வுக்கு எதிராக ஒரு பெரிய எதிர்ப்பு இருக்கிறது. மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வசதியாக இருப்பது காங்கிரஸின் முயற்சியாக இருக்கும். பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும்.” என்று ராகுல் காந்தி கூறியதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.
பா.ஜ.க.,வுக்கான மாற்றுப் பார்வையை திறம்பட ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளை ராகுல் காந்தி வலியுறுத்தினார். “எதிர்க்கட்சிகள் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் திறம்பட நின்றால், நான் களத்தில் இருந்து கேட்பதை அடிப்படையாகக் கொண்டு, பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் கடினமாகிவிடும். ஆனால் எதிர்க்கட்சிகள் சரியாக ஒருங்கிணைத்து மாற்றுப் பார்வையுடன் மக்களிடம் செல்ல வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசை கேள்வி கேட்கும் போதெல்லாம், ராணுவத்தை தாக்குவதாக பா.ஜ.க தொடர்ந்து கூறி வருவதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, “அரசாங்கம் தனது தவறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஆயுதப்படைகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது,” என்று கூறினார். சீனாவும் பாகிஸ்தானும் ஏதோ பெரிய அளவில் திட்டமிட்டு வருவதாகவும், டோக்லாம் மற்றும் தவாங் மோதல்கள் இதற்கான ஏற்பாடுகள் என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிடுகையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி “காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறப் போகிறது என்பதை நான் எழுத்துப்பூர்வமாக கொடுக்க முடியும். பா.ஜ.கவை எங்கும் காண முடியாது. இதற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். பா.ஜ.க பணத்தைப் பயன்படுத்தி ஆட்சி அமைத்தது மத்திய பிரதேசத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்,” என்று கூறினார்.
அவரது டி-ஷர்ட்கள் தலைப்புச் செய்தியாக வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ராகுல் காந்தி கூறினார்: “டி-ஷர்ட்டால் ஏன் இவ்வளவு தொந்தரவு? நான் ஸ்வெட்டர் அணிவதில்லை, ஏனென்றால் எனக்கு குளிர்காலம் பயம் இல்லை. எனக்கு குளிர தொடங்கியவுடன் ஸ்வெட்டர் அணிய நினைக்கிறேன்.”
source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-bharat-jodo-yatra-bjp-568624/