8 1 2023
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற்ற தமிழகத்தின் முதல்
ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்தோடு நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 484 காளைகள் களம் கண்ட நிலையில் போட்டியின்போது காளைகள் பாய்ந்ததில் 74 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில்
இன்று தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மிக விமர்சையாக நடைபெற்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்கனவே இரண்டு முறை இந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டதால் மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கிடையே இன்று காலை 8.30 மணிக்கு
தொடங்கிய இந்த போட்டியினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல்
துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை
உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 484
காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.
வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் களத்தில் நின்று
லாவகமாக அடக்கிய காட்சிகளும் , அடக்க முயன்ற காட்சிகளும் பார்வையாளர்களை
மெய்சிலிர்க்க வைத்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில் , நாற்காலி, மின்விசிரி, மிக்ஸி மற்றும் ரொக்க பணம் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டது.
திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான
விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களுக்கும் மாடுபிடி
உரிமையாளர்களுக்கும் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.
இறுதியாக மதியம் 2:45 மணியளவில் போட்டி நிறைவடைந்ததாக வருவாய்
கோட்டாட்சியர் முருகேசன் அறிவித்தார்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள்
பாய்ந்ததில் பார்வையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் மற்றும் இரு காவலர்கள் என மொத்தம் 74 பேர் காயமடைந்ததனர். அதில் படுகாயம் அடைந்த 10பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக
தேர்வு செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் கிராமத்தைச் சேர்ந்த
யோகேஸ்வரன் என்ற வீரருக்கு ஒரு இருசக்கர வாகனம் பரிசாகவும் அதேபோல் களத்தில்
நின்று விளையாடி அனைவரின் கவனத்தைப் பெற்ற தஞ்சை மாவட்டம் மருதகுடி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் காளை சிறந்த காளையாகவும் தேர்வு
செய்யப்பட்டு அந்த காளையின் உரிமையாளருக்கும் ஒரு இருசக்கர வாகனம் பரிசாக
வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனிடையே போட்டி நிறைவடைந்து விட்டதாக வருவாய் கோட்டாட்சியர் அறிவித்த
நிலையில் அதன் பின்பும் அழைத்து வரப்பட்ட 50க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல்
வழியாகவே அவிழ்த்து விடப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர்
போலீசார் கூட்டத்தை களைத்து மாட்டின் உரிமையாளர்களை அவர் அவர் ஊர்களுக்கு
அனுப்பி வைத்தனர்.
source https://news7tamil.live/pudukottai-tamil-nadus-first-jallikattu-which-was-successfully-completed.html