வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

2019ம் ஆண்டு முதல் பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.22.76 கோடி; மத்திய அரசு தகவல்

 2 2 23

பிரதமர் மோடி 2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு  உள்ளதாகவும், அதற்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இதில், நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் மாநிலங்களவையில் வெளியுறவுதுறை இணை அமைச்சர் வி.முரளீதரன் உறுப்பினர் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அதில், 2019ம் ஆண்டு முதல் குடியரசு தலைவர் 8 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். குடியரசு தலைவரின் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.6.24 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவராக இருந்த போது 7 வெளிநாட்டு பயணங்களும், திரௌபதி முர்மு குடியரசு தலைவராக பங்கேற்ற பிறகு ஒரு வெளிநாட்டு பயணமும் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போதைய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கடந்த செப்டம்பரில் இங்கிலாந்துக்கு பயணம் செய்திருந்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி 2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார் எனவும், அதற்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2019ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஜப்பானுக்கு 3 முறையும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இரண்டு முறையும் சென்றுள்ளார்.

மேலும், 2019ம் ஆண்டு முதல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.20.87 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுவரை 86 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/from-2019-the-prime-ministers-foreign-travel-expenses-are-rs-22-76-crore-central-govt-information.html