மணிப்பூரில் மீண்டும் நிகழ்ந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்துவருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்தனர். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டி டெல்லி, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமித்ஷா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனை சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
கடந்த 50 நாட்களாக அங்கு கலவரம் வெடித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு 350 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களின் எல்லையோர பகுதிகளில் புதிய வன்முறை சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆயுதம் தாங்கிய கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மெய்டி சமூகத்தினர் 3 பேரும், குக்கி சமூகத்தை சேர்ந்த ஒருவரும் இருப்பதாக தெரியவந்துள்ளது. தாக்குதலின் பின்னணியில் குக்கி சமூகத்தினர் உள்ளதாக மெய்டி சமூகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இரு சமூகத்தினர் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/tension-increases-again-in-manipur-4-killed-in-violent-incident.html