ஞாயிறு, 9 ஜூலை, 2023

கூட்டணி வைப்போர் அரசியல் அழிவை எதிர்கொள்வர்! அஜித்பவாருக்கு சரத்பவார் எச்சரிக்கை!

 

பாஜகவுடன் கூட்டணி வைப்போர் அரசியல் அழிவை எதிர்கொள்வர் என்றும் அதே நிலைதான் அஜித்பவாருக்கும் நேரும் எனவும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் எச்சரித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் தலைவரான சரத்பவாரின் அண்ணன் மகனும் ஆன அஜித் பவார், கட்சியை பிளந்து பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். அதோடு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக கூட்டணியில் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். அதோடு தனது ஆதரவாளர்களில் 8 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவியும் பெற்றுள்ளார்.

தனக்கே பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கூறி தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்திற்கும் அஜித்பவார் உரிமை கோருகிறார். இந்நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் விதமாக மும்பையில் சரத்பவார் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த கூட்டத்தில் பேசிய சரத்பவார், “பாஜகவுடன் கைகோர்த்து அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்பவர்கள் இறுதியில் அரசியல் ரீதியாக அழிக்கப்படுகிறார்கள். தனது அரசியல் கூட்டாளிகளை படிப்படியாக பலவீனப்படுத்துவது பாஜகவின் கொள்கை. மற்ற மாநிலங்களில் இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன என்று கூறினார்.

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அதை உணர்ந்ததால் தான் ஆர்ஜேடியுடன் கூட்டணிக்கு மாறியுள்ளார். பஞ்சாபில் அகாலி தளம் பல ஆண்டுகளாக பாஜகவுடன் இருந்தது, ஆனால் இப்போது அந்தக் கட்சியே இல்லை. தெலங்கானா, ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பாஜகவுடன் சென்றவர்களுக்கும் அதுதான் நடக்கும் என்றும் சரத்பவார் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைய காரணமான அஜித்பவார் அணியின் தனது போட்டோவை அவர்களது பேனர்களில் பயன்படுத்த கூடாது எனவும் எச்சரித்தார். “அவர்கள் அங்கு சென்றபின்னர் என் புகைப்படத்தை ஏன் பயன்படுத்துகிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லை. எங்கள் சின்னம் மற்றும் கட்சியின் பெயரை அவர்கள் கிடைக்க விட மாட்டேன் எனவும் சரத் பவார் கூறினார்.

 

source https://news7tamil.live/allies-with-bjp-will-face-political-destruction-sarathpawar-warning-to-ajitpawar.html

Related Posts: