வியாழன், 20 ஜூலை, 2023

இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம்: மணிப்பூர் வீடியோவை வெளியிட மத்திய அரசு தடை

 

மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்லவமாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் தொடர்பான வீடியோவை ஊடகங்கள் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையே  ஏற்பட்ட மோதல் இனக்கலவரமாக மாறியுள்ளது. கடந்த இரு மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.

கலவரத்தை உடனடியாக நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்ததாக காணொலி ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது.

இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இந்த காணொலிக்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த காணொலியை கண்ட மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பரவிய காணொலியில் காணப்படும் சம்பவம் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் நடந்ததாகவும், கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனிடையே, இந்த வீடியோவை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கும், சமூக ஊடகங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.


source https://news7tamil.live/central-government-orders-ban-on-publication-of-video-related-to-nude-procession-of-two-women.html