சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவின் போது உள்ளூர் அதிகாரிகள் துன்புறுத்துவதாக குற்றம் சாட்டி பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா ட்விட்டரில் அவதூறு பதிவிட்டதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் உள்ள பழமையான நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக எழுந்த புகாரின் பேரில் தமிழக பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவுக்கு சிதம்பரம் டவுன் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். வலதுசாரி இணையதளமான தி கம்யூனின் இயக்குநராக இருக்கும் எஸ்.ஜி. சூர்யா, ஜூலை 4-ம் தேதி விசாரணை அதிகாரியை சந்திக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வருவாய் அலுவலர் ஒருவரின் புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவின் போது உள்ளூர் அதிகாரிகள் துன்புறுத்துவதாக குற்றம் சாட்டி அவதூறு பதிவிட்டதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தி கம்யூனின் இணை இயக்குனரான கௌசிக் சுப்ரமணியனும் சம்மனுக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் கோவிலில் உள்ள கனகசபை மண்டபத்தில் ஜூன் 24-ம் தேதி தொடங்கிய நான்கு நாள் ஆனித் திருமஞ்சனத் திருவிழாவின் போது பக்தர்கள் கனக சபை மண்டபத்துக்கு மேல் ஏறி வழிபட கோவில் அர்ச்சகர்களாக இருக்கும் தீட்சிதர்கள் அனுமதி மறுத்ததால் எழுந்த சர்ச்சையில் அதிகாரிகளின் பெயர் பதவிகள் தொடர்புபடுத்தப்பட்டன. பக்தர்கள் கனக சபை மீது ஏறி வழிபடக் கூடாது என்ற தீட்சிதர்கள் வைத்த அறிவிப்பு பலகையை இந்து சமய அறநிலையத் துறை நீக்கியது.
ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட்ட தி கம்யூன் தளத்தின் கட்டுரை, ஒரு இந்து அறநிலையத் துறை அதிகாரியும் காவல்துறையும் தீட்சிதர்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியது. உடல் ரீதியான ஆக்கிரமிப்பு மற்றும் அவர்களின் மத சின்னங்களை இழிவுபடுத்தியது. இந்து அறநிலையத் துறையின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக இந்த குற்றச்சாட்டுகள் இருந்தன. இதன் ஒரு பகுதியாக அதிகாரி சரண்யா, சில பெண் காவலர்களுடன் சேர்ந்து, தீட்சிதர்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் அறிவிப்பு பலகையை அகற்றினார்.
இதைத் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு, தீட்சிதர்கள் வழிமறித்து தாக்கியதாக சரண்யா சிதம்பரம் போலீசில் புகார் அளித்தார். “இதைத் தொடர்ந்து, பொது தீட்சிதர் கமிட்டியின் செயலாளர் சிவராம தீட்சிதர் மற்றும் சில தீட்சிதர்கள் உட்பட 10 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழும், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பக்தர்களின் வழிபாட்டு உரிமை மறுப்பு, முறைகேடுகள் மற்றும் கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாமை ஆகியவற்றைக் காரணம் காட்டி, தீட்சிதர்களிடம் இருந்து கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ள பின்னணியில் பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/police-summon-bjp-state-secretary-over-defamatory-posts-amid-chidambaram-temple-row-714525/