வியாழன், 6 ஜூலை, 2023

தென்காசி அருகே பலத்த மழையால் குளம் உடைந்து விளை நிலங்களில் புகுந்த நீர்!

 06 07 2023

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே  மேக்கரைகுளம் உடைந்ததால்  விளைநிலம் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கியது. 
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில்
நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. செங்கோட்டை, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், வடகரை, கணக்கப்பிள்ளை வலசை, குத்துக்கல்வலசை, குற்றாலம்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து மின் கம்பிகள் சேதம் அடைந்தது.
இதனால் காலை முதல் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை
ஏற்பட்டுள்ளது. தற்போது, அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பலத்த காற்று வீசி  வருகிறது.  பண்பொழி அருகே  கந்தசாமிபுரத்தில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மிகப் பெரிய  ராட்சத மரம் விழுந்தது. இதில் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனிடையே  செங்கோட்டை அருகே உள்ள மேக்கரையில் இருந்து அடவிநயினார் அணைக்கு செல்லும் சாலையில் உள்ள மேக்கரைகுளம் உடைந்து விளைநிலங்களுக்குள் நீர் புகுந்தது. சாலைகள் நீரில் மூழ்கியதால் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் இன்னலை எதிர்கொண்டனர்.


source https://news7tamil.live/heavy-rains-in-tenkasi-district.html