புதன், 5 ஜூலை, 2023

செக் மோசடி வழக்கு :

 

செக் மோசடி வழக்கில் திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 
6 மாதம் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
திருவள்ளூரை சேர்ந்த தொழிலதிபர் நாராயணமூர்த்தி என்பவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி  7 லட்சம் பணத்தை கடனாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் கருணாகரன் பெற்றுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் சேதம் அடைந்தன. இதனால் அவர் பேசியபடி கடனை திருப்பி அடைக்க முடியவில்லை. கொடுத்த  பணத்தை நாராயணமூர்த்தி கருணாகரனிடம் கேட்டபோது ஒரு ஆண்டுகளாக நாட்களை கடத்தி வந்துள்ளார். 2020 ஆம் ஆண்டு 7 லட்சம் பணத்திற்காக தனித்தனியாக மூன்று காசோலைகளை கருணாகரன் நாராயண மூர்த்தியிடம் அளித்துள்ளார்.
ஆனால் கருணாகரன் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் வங்கியிலிருந்து காசோலை திரும்பி வந்தது.  இதனால் நாராயணமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.  பின்னர் அவரிடம் பணமாக கேட்டபோதும் தராமல் நாட்களை கடத்தி வந்துள்ளார். இதனால் கருணாகரன் மீது திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில்  2020 ஆம்  ஆண்டு செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை திருவள்ளூர் விரைவு நீதிமன்ற  நடுவர் செல்வரசி முன் நேற்று விசாரணைக்கு  வந்தது. அப்போது நாராயண மூர்த்தியிடம் பணம் பெற்றது ஆதாரத்துடன் உறுதி ஆனதால் கருணாகரனுக்கு ஆறு மாத சிறை தண்டனையும் 30 நாட்களுக்குள் 7 லட்சம் பணத்தை மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார் . மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக ஒரு மாத காலம் அவகாசம் அளித்து நீதிமன்ற பிணையில் கருணாகரன்  விடுவிக்கப்பட்டார்.
இதேபோல்  திருமுல்லைவாயலை சேர்ந்த தொழிலதிபர் பாபு என்பவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு 3 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்ற வழக்கில்  கருணாகரனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/check-fraud-case-thiruvallur-district-bjp-executive-jailed-for-6-months.html