தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் மகளிர் உதவித்தொகை திட்டத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றிய திமுக அரசு தங்களது தேர்தல் அறிக்கையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்ற திட்டத்தை மட்டும் அறிவித்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
மேலும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அமைச்சர்கள் கூட இந்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறியிருந்தனர். அதன்படி தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐ.ஏ.எஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டார்.
மேலும் இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக தமிழக அரசு முதற்கட்டமாக ரூ7000 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், ஒரு கோடி மகளிருக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,
தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இவ்வளவு பெரிய திட்டம் உருவாக்கப்பட்டது இல்லை. மகளிருக்கு சொத்தில் பங்கு உண்டு என்பதை சட்டப்பூர்வமாக்கியவர் கருணாநிதி. மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்த திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் உரிமைத்தொகை திட்டத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது. இந்த திட்டத்திற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியினர் இதர ஆதரவற்றோர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்க வேண்டும். சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்கள் இந்த திட்டத்தில் பயனடைவதை ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். விளிம்பு நிலை மக்களிடம் ஆதார், ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் அவற்றை பெற வழி செய்து, உரிமை தொகை கிடைத்திட உதவ வேண்டும். அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.
செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும். ரேஷன் கடைகள் மூலம் 1 கோடி விண்ணப்பங்களை விநியோகித்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உரிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும், இந்த திட்டம் பயனாளிகளை சென்றுசேர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரம் வசிப்பவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-women-entitlement-scheme-named-kalaignar-karunanithi-mk-stalin-said-718024/