2 9 23
அயர்லாந்தில் உள்ள கிரேஸ்டோன்ஸ் என்ற நகரத்தில் குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்ஃபோன்கள் இன்று அத்தியாவிசய தேவைகளில் ஒன்றாக மாறிப்போயுள்ளது. குழந்தையை உண்ண வைக்க வேண்டும் என்றால் உடனே அவர்கள் கைகளில் செல்போனை திணித்து ஒரே இடத்தில் உட்காரவைத்து உணவை ஊட்டுவதில் தொடங்குகிறது பிரச்னை.
அதோடு கொரோனா காலங்களில் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட் போன்கள் கொடுக்கப்பட்டது. அதிலிருந்து அனைத்து குழந்தைகளும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகிவிட்டனர் என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு எந்நேரமும் கைகளில் ஸ்மார்ட் போன்களை வைத்திருக்கின்றனர். இதனால் அவர்களின் உடல் இயக்கம் குறைந்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி போயுள்ளனர். இதனால் கற்றல் திறன் குறைபாடு, பார்வை குறைபாடு என பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகத்தில் 10 வயது வரையுள்ள குழந்தைகளில் 5ல் 2 பங்கினர் ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ளனர். 12 வயதுகளில் 71%, 14 வயது வரையுள்ள குழந்தைகளில் 91% பேர் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அயர்லாந்தில் உள்ள ஒரு நகரத்தில் குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களே முன்வந்து குழந்தைகளுக்கு ஸ்மார்ட்ஃபோன் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து செயல்படுத்தியுள்ளனர். கிழக்கு அயர்லாந்தின் விக்லோ(wicklow) நாட்டில் கிரேஸ்டோன்ஸ் (greystones) நகரம் உள்ளது. இது டப்ளின் என்ற பகுதிக்கு தெற்கே 15 மைல் தொலைவில் உள்ள கடற்கரையோர நகரமாகும்.
இங்கு குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடிக்கும்வரை அவர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் கொடுக்க வேண்டாம் என்று பெற்றோர்களே முடிவு செய்துள்ளனர். இந்த நகரத்தில் உள்ள எட்டு தொடக்கப்பள்ளிகள் முதலில், மாணவர்கள் மின்னணு சாதனங்களைக் கொண்டுவருவதற்கு தடை விதித்தன. அதன்பின்னர் பள்ளியின் பெற்றோர் சங்கங்கள் தாமாக முன்வந்து குழந்தைகளுக்கு ஸ்மார்ட்ஃபோன் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.
தற்போது நகரத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்ஃபோன் வாங்கித் தர வேண்டாம் என்று ஒருமித்தமாக முடிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் யுனெஸ்கோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/ban-on-childrens-use-of-smartphones-do-you-know-where.html