ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

ஒரே நேரத்தில் எல்லா தோல்விகளையும் சந்திக்கலாம் என்பதற்காக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்

 2 9 23

வரிசையாக தோல்விகளைச் சந்தித்து வருவதால் தொடர்ந்து மனக் கஷ்டமாக இருக்கும். எனவே ஒரே நேரத்தில் எல்லா தோல்விகளையும் சந்திக்கலாம் என்பதற்காக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அ.தி.மு.க ஆதரிக்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, ஆட்சியில் இருந்தபோது, ​​ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை எதிர்த்த அ.தி.மு.க இப்போது ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, “அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது ஆதரவு தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தனர். சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தனர். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வியடைந்தனர்.

இப்படி வரிசையாக தோல்விகளை சந்தித்தால் தொடர்ந்து கஷ்டமாக இருக்கும், ஒரே நேரத்தில் எல்லா தோல்விகளையும் எதிர்கொண்டால் அத்துடன் முடிந்துவிடும் அல்லவா? மனது சாந்தமடையும். ஒரே நாளில் ஒரே நேரத்தில் எல்லா தோல்விகளையும் பார்ப்பதற்காக அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோதே இந்த திட்டத்தை எதிர்த்தது. இப்போதும் எதிர்க்கிறோம். தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உணவு, ஒரே உடை, ஒரே மொழி போன்றவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். நாங்கள் இருக்கும் வரை ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதையெல்லாம் அனுமதிக்க மாட்டோம்,” என்று தெரிவித்தார்.

அண்ணா பெயரைக் கட்சியில் வைத்துக்கொண்டு மாநில சுயாட்சிக்கு எதிராக அ.தி.மு.க செயல்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அது அண்ணாவின் பெயர் என்று யார் சொன்னது? அ.தி.மு.க.,வில் உள்ள ’அ’ எழுத்து அமித் ஷாவின் பெயர்” எனக் கூறினார்.

முன்னதாக, காலை உணவுத் திட்டத்தை சீமான் விமர்சித்தது பற்றிப் பேசிய உதயநிதி, “காலை உணவுத் திட்டம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்பை விட மாணவர்கள் கூடுதலாக வருகிறார்கள். நான் பல மாவட்டங்களில் ஆய்வு செய்து உணவை சாப்பிட்டு, எத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் என்பதையெல்லாம் ஆய்வு செய்துள்ளேன். 17 லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறுகிறார்கள். ஆனால், காலை உணவுத் திட்டம் தொடர்பாக வன்மத்துடன் செய்தி வெளியிட்ட நாளிதழுக்கு தமிழக மக்கள் மத்தியில் எப்படி எதிர்ப்பு எழுந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே, யாராக இருந்தாலும் மாணவர்களுடன் சென்று அமர்ந்து உணவை சாப்பிட்டு விட்டு அதன்பிறகு கருத்து கூறுங்கள்” எனத் தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-slams-admk-for-supporting-one-nation-one-election-agenda-747883/