சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறி கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாதம் முழுவதுமாக போராட்டத்தில் குதித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு அந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 3 ம் தேதி கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த பேராசிரியர் ஹரிபத்மன் கடந்த ஜூன் 6ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில், சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவை மாற்றியமைக்கக் கோரி கல்லூரி மாணவிகள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாணவிகள் தரப்பில், கலாஷேத்ரா அறக்கட்டளை கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை விவகாரத்தில், மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கலாஷேத்ரா அறக்கட்டளை தரப்பில், கலாஷேத்ரா கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்புக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கலாஷேத்ரா வகுத்துள்ள கொள்கை மாணவிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இல்லை என மாணவிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாணவிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்க நீதிபதி அறிவுறுத்தி வழக்கை ஒத்தி வைத்து வைத்து உத்தரவிட்டார்.
source https://news7tamil.live/chennai-kalashetra-college-student-sexual-harassment-case-teachers-who-acted-in-support-of-students-have-been-sacked.html