செவ்வாய், 10 அக்டோபர், 2023

நவம்பர் 7 முதல் 30 வரை... 5 மாநில தேர்தல் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

 Five states Assembly Elections in India 2023 Schedule announced in tamil

40 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் சுமார் 8.52 லட்சம் வாக்காளர்களை கொண்ட மிசோரம் மாநிலத்தில் தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

 Assembly Elections in India 2023 Schedule |  Election-commission of India: அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக மிசோரம், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய  5 மாநிலங்களின்  சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய உள்ள 5 மாநிலங்களின் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று அறிவித்தார். அதன்படி, சத்தீஷ்கார் மாநிலத்திற்கு தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்டம் நவம்பர் 7 ஆம் தேதியும், இரண்டாம் கட்டம் நவம்பர் 17 ஆம் தேதியும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநிலம் 90 சட்டமன்றத் தொகுதிகளையும், மொத்தம் சுமார் இரண்டு கோடி வாக்காளர்களைக் கொண்டுள்ளது. 

200 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மொத்தம் சுமார் 5.25 கோடி வாக்காளர்களை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. 230 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மொத்தம் சுமார் 5.6 கோடி வாக்காளர்களை உள்ளடக்கிய மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

119 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் சுமார் 3.17 கோடி வாக்காளர்களை உள்ளடக்கிய தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 40 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் சுமார் 8.52 லட்சம் வாக்காளர்களை கொண்ட மிசோரம் மாநிலத்தில் தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/five-states-assembly-elections-in-india-2023-schedule-announced-in-tamil-1515725