சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்-ரேயைப் போன்றது, இந்த கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளான இன்று ஷாதோல் மாவட்டத்தில் பியோஹரி என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
நாட்டில் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என்கிற நிலையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்-ரேயை போன்றது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கர்நாடகம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதுகுறித்து பேசுவதன் நோக்கம், ஓபிசி, தலித் மற்றும் பழங்குடியின மக்கள் அவர்களுக்கான உரிமையைப் பெற வேண்டும் என்பதே.
நாட்டின் மொத்த பட்ஜெட்டை நிர்வகிக்கும் 90 உயர்நிலை அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். பட்ஜெட்டின் 5 சதவீதத்தை மட்டுமே இந்த அதிகாரிகள் நிர்வகிக்கின்றனர். தலித் மற்றும் பழங்குடியினரின் நிலைமை இன்னும் மோசம். இதுபோன்ற உண்மைகள் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரங்களை பாஜக அரசு வெளியிடவில்லை. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றி பேசாத பிரதமர் மோடி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். மத்தியப் பிரதேசத்தைப் பல்வேறு ஊழல்களுக்கான ஆய்வுக் கூடமாக பாஜக மாற்றியுள்ளது. இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி தெரிவித்தார்.
source https://news7tamil.live/caste-wise-census-will-bring-to-light-the-status-of-obc-dalit-and-tribal-people-rahul-gandhi-speech.html