புதன், 11 அக்டோபர், 2023

காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!

காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு வணிகர்கள் ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளனர். நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல்,கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம், உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட கடைகளும், 3000 உணவகங்களை அடைத்து விவசாயிகளுக்கு வணிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்று காலை ஆறு மணி முதல் நாளை காலை 6 மணி வரை டீக்கடை, பெட்டிக்கடை வரை அனைத்து கடைகளையும் அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 13 மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கும்பகோணம்,தஞ்சாவூர் , பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் 7ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம்,புத்தூர், திருவெண்காடு , பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சுமார் 8000 உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்திற்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், வணிகர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், ஆதரவு தெரிவித்துள்ளன.


source https://news7tamil.live/protest-against-karnatakas-refusal-to-release-water-in-cauvery-shop-closures-in-delta-districts.html