சனி, 7 அக்டோபர், 2023

”தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கிறார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 

குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை முறையாக செயல்படுத்திய தமிழகத்திற்கு தண்டனையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பார்க்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சாவூரில் தி.க சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி, மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் பாலசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அமைச்சர் அன்பில் மகேஸ் பெற்றுக்கொண்டார். மேலும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்ற விருது ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:

`கருணாநிதிக்கும் எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய் வீடு. திராவிடர் கழகத் தலைவர் அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்வேன். ஏனென்றால் இன்றைக்கு என்னை காத்துக் கொண்டிருப்பவர். மிசா காலத்தில் இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர்தான் திராவிடர் கழகத் தலைவர். பெரியாரும், அண்ணாவும் இல்லாத நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் வீரமணி என கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை கருணாநிதி இல்லாத இந்த நேரத்தில் கொள்கை வழிகாட்டியாக எனக்கு இருப்பவர் வீரமணி தான். தி.க-வும், தி.மு.க-வும் இரட்டை குழல் துப்பாக்கி என்று அண்ணா கூறினார். தி.க-வும், தி.மு.க-வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றார் கருணாநிதி. என்னைப் பொறுத்தவரையில், தி.க-வும் தி.மு.க-வும் உயிரும் உடலும்போல தான். உயிரும் உடலும் இணைந்து இயங்குவதுபோல, இந்த இனத்திற்காக நாம் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா நடத்தக்கூடிய முழு தகுதியும், கடமையும் தி.க-வுக்கு உண்டு.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு இயக்கத்தில் சிலர் குழப்பத்தை விளைவிக்க முயன்றனர். அப்போது முதலமைச்சர் பொறுப்பு வேண்டாம் எனக் கூறியவர் கருணாநிதி. ஆனால் நீங்கள்தான் முதல்வராக வரவேண்டும் என பெரியார் கூறினார். கருணாநிதியை முதல்வராக ஆக்கியதே பெரியார் தான்.

திராவிடர் கழகத்தில் பெரியார், மணியம்மை, ஆசிரியர் வீரமணி எனச் சொன்னால், தி.மு.க-வில் அண்ணா, கருணாநிதி, நான் என மூன்று சகாப்தங்களாக இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 50 ஆண்டுகளாக ஓர் இயக்கத்தின் தலைவராக இருந்தவர் கருணாநிதி. ஐந்து முறை முதலமைச்சராக இருந்துள்ளார். அவரது கண் அசைவில் பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் உருவாக்கியுள்ளார்.

தமிழ்நாடு அனைத்து நிலையிலும் முன்னேறிய மாநிலமாக, தன்னிறைவு பெற்ற மாநிலமாக மலர வேண்டும். அனைவரின் குரலுக்கும் மதிப்பும் மரியாதையும் இருக்க வேண்டும். இதுதான் மத்திய அரசும், உள்ளடங்கிய தமிழகமும் இயங்க வேண்டிய முறை. கூட்டாட்சி கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகத்தான் கூட்டணி அமைத்துள்ளோம்.

இது அரசியல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி. தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கவில்லை. அந்த வெற்றிக்குப் பின்னால் அமையப்போகும் ஆட்சிக்கு உருவாக்க வேண்டிய கொள்கையை மனதில் வைத்து செயல்படுகிறோம். தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். கல்வி, நிதி, சமூகநீதி, இனம், மொழி, மாநில சுயாட்சி என அனைத்து உரிமைகளையும் மீட்போம். தமிழ்நாட்டின் நாடாளுமன்ற மக்களாட்சி உரிமைகளுக்கு கேடு விளைவிக்க பார்க்கிறார்கள்.

மக்கள்தொகை குறைந்து விட்டது என நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைக்கின்ற சதியை அரங்கேற்றப் பார்க்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை முறையாக செயல்படுத்திய தமிழகத்திற்கு தண்டனையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பார்க்கிறார்கள். 39 எம்.பி-கள் நாடாளுமன்றத்திற்குச் செல்கிறார்கள் என்றால், நமது உரிமையை நிலைநாட்டுவதற்கும் எடுத்துச் சொல்வதற்கும்தான்.

மகளிருக்கான இட ஒதுக்கீடு 33 சதவிகிதத்தை அறிவித்தார்கள். அந்த அறிவிப்பை பா.ஜ.க முழுமையாக கொண்டு வந்திருக்கிறதா. மக்கள்தொகை கணக்கெடுப்பு தொகுதி மறுவரையரை முடிந்த பிறகு என சொல்வது இட ஒதுக்கீட்டை நிறைவேற்றாமல் இருப்பதற்கான தந்திரம். இதர பிற்படுத்தப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டை வாங்க மறுப்பது பா.ஜ.க-வின் உயர் வகுப்பின் மனோபாவம். காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டை காலி செய்ய போகும் ஆபத்து இருக்கிறது.

தமிழினத்தை, தமிழகத்தை, இந்தியாவை, சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி ஆகிய அனைத்தையும் காக்க எனது வாழ்க்கையை, முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன். இது திராவிடர் கழகம் நடத்திய பாராட்டு விழாவில், நான் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


source https://news7tamil.live/they-are-trying-to-reduce-the-number-of-parliamentarians-in-tamil-nadu-chief-minister-m-k-stals-accusation.html