வியாழன், 5 அக்டோபர், 2023

ஆளுநர் க்கு கடலூரில் கருப்புக் கொடி காட்டி இடதுசாரிகள் எதிர்ப்பு

 CPM CPI

ஆளுநர் ஆர்.என். வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காட்டுமன்னார்கோவில் அருகே கறுப்புக்கொடி காட்ட முயன்ற சி.பி.ஐ, சி.பி.எம் கட்சியினர் கைது  

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறி, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காட்டுமன்னார்கோவில் அருகே கறுப்புக்கொடி காட்ட முயன்ற சி.பி.ஐ, சி.பி.எம் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.ஆதனூர் கிராமத்தில் நந்தனார் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. அதே போல, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. 

இதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாய்க்கிழமை இரவே கடலூர் வந்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கினார். ஆளுநருக்கு பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராம. கதிரேசன் உள்ளிட்டோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். 

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து, புதன்கிழமை (அக்டோபர் 4) ஆதனூரில் நந்தனார் குருபூஜை விழாவுக்கு கிளம்பினார். அப்போது, நந்தனார் குருபூஜை விழாவில் சனாதனத்தை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஆளுநர் ஆர்.என். ரவி வந்திருக்கிறார் எனக் கூறி, ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 “ஆளுநர் திரும்பி போக வேண்டும் எனவும் , சனாதனத்தை தூக்கி பிடிக்கவே ஆளுநர் செயல்படுகிறார்; நந்தனார் குருபூஜையில் பிரிவினைவாதத்தை கொண்டு வருவதற்காக பூணூல் அணியும் விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஆளுநர் திரும்பிச் செல்ல வேண்டும்” என்று ஆளுநர் செல்லும் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆளுநர் வருகையின்போது போராட்டங்கள் நடைபெறும் என்பதால் கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு வந்திருக்கும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக்கொடி காட்ட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 

ஆளுநர் ஆர்.என். ரவி நந்தனார் குருபூஜை விழா முடிந்த பிறகு, நடைபெற்ற பூணூல் அணியும் விழாவில் கலந்து கொண்டார்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் - தி.மு.க அரசுக்கும் இடையே மோதல் மோதல் நடந்து வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி ம.தி.மு.க கையெழுத்து இயக்கம் நடத்தி, அதனை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது. 

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்ட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cpi-and-cpm-black-flag-shows-to-governor-rn-ravi-visit-in-cuddalore-1510645