வியாழன், 5 அக்டோபர், 2023

ஆசிரியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு: அன்பில் மகேஷ்

 அன்பில் மகேஷ் விளக்கம்

ஆசிரியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Anbil Mahesh on Teachers Strike : சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கடந்த மாதம் (செப்டம்பர்) 28ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். பல்வேறு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தும் இடத்திலேயே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதற்கிடையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் வெளியானது. முன்னதாக இது குறித்து பேசிய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட், “தமிழக அரசு சார்பில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறிப்பிட்ட தேதிக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவோம்” என்று உறுதிப்பட தெரிவித்தார்.

இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளியின் உத்தரவாதத்தை ஏற்க TET தரப்பு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், போராட்டம் தொடர்பாக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஆசிரியர்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்; சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை குழு பரிசீலிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “நிதித்துறை, பள்ளிக்கல்வி செயலர்கள் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் குழுவில் இடம்பெறுவார்கள் என்ற அன்பில் மகேஷ் இந்தக் குழு 3 மாதத்தில் பரிந்துரைகளை வழங்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/anbil-mahesh-said-that-a-3-member-committee-will-be-formed-to-examine-the-teachers-demands-1510518

Related Posts: