வியாழன், 5 அக்டோபர், 2023

”காலையில் சோதனை மாலையில் கைது” – ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை..!

 

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வந்தனர். இதே மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டெல்லி துணை முதல்வர் சிசோடியாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருவதாக சொல்லப்பட்ட சூழலில் இந்த சோதனை நடைபெற்றது.

 டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதனால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டின.  இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்நிலையில், இன்று காலை முதல் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  அவருடன் தொடர்புடைய சிலரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.  முன்னதாக சஞ்சய் சிங் எம்.பி. அலுவலக ஊழியர்கள் சிலரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

ஏற்கெனவே, டெல்லி மதுபான கொள்கை புகாரில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் தொடர்பு குறித்து அமலாக்கத் துறை விசாரணை, சோதனைகள் மேற்கொண்டது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை தனது விசாரணை வளையத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

காலை முதலே சஞ்சய் சிங் எம்பி வீட்டில் சோதனை நடைபெற்று வந்த நிலையில் மாலையில் அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது.

source https://news7tamil.live/inspection-in-the-morning-arrest-in-the-evening-enforcement-action-against-aam-aadmi-mp-sanjay-singh.html