வியாழன், 5 அக்டோபர், 2023

தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்: வலியுறுத்தும் திமுக கூட்டணி கட்சிகள்

 

திமுக கூட்டணி கட்சிகள்

திமுக கூட்டணி கட்சிகள்

சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களை பிகார் அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள வி.சி.க, என்.டி.ஏ கூட்டணியில் உள்ள பாமக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி உள்ளன.

வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் “ சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் கடந்த பின்னும் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியல் பிரதிநிதித்துவத்தில் உரிய இடங்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பெற முடியாத நிலை தொடர்ந்து  வருகிறது.

எஸ்சி- எஸ்டி பிரிவினரின் மக்கள் தொகைக்கு ஏற்பட இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றாலும் 50% உச்சவரம்பு  விதிக்கப்பட்டதால் அவர்களுடைய இட ஒதுக்கீடும் உயர்த்தப்பட முடியாத நிலை உருவாகிவிட்டது. 10% சதவீதம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு  இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பிறகு 50 % ஒட ஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்த வேண்டும்  என்ற குரல்கள் வலுவாக எழுந்தன. ஆனால் ஒன்றிய பாஜக அரசு அதை பொருட்படுத்தவில்லை. பல்வேறு மாநில அரசுகள் ஒட ஒதுக்கீட்டின் அளவை  உயர்த்த  முற்பட்ட போதெல்லாம் உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை குறித்து  போதிய தரவுகள் இல்லை என்றக் கூறி அதை நிராகரித்தது.

ஒன்றிய பாஜக அரசு இனிமேலும் சாக்கு போக்கு சொல்லாமல் உடனடியாக  சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு  அளிக்கும் விதமாக எதிர்வரும் நாடாளுமன்ற  கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்ற வேண்டும்.

பிகார் மாநில அரசு மேற்கொண்டதைப் போலவே தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் கூறுகையில் “ இந்தியாவிலேயே முதன் முறையாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன் அதன் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது பிகார் மாநில அரசு . இதன் மூலம் சமூக நீதியைக் காப்பதில் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமையை பிஹார் அரசு வென்றெடுத்துள்ளது.

சமூக நீதியைக் காக்கும் விஷயத்தில் தமிழகத்திற்கும், பிஹாருக்கும் இடையே எப்போதும் மறைமுகமான போட்டி நடந்து கொண்டேதான் இருக்கிறது. மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை, 1951ம்  ஆண்டில் மக்கள் போராட்டத்தின் மூலம் சாத்தியமாக்கியது தமிழகம் என்றால், தேசிய அளவில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கான மண்டல்  ஆணையம், அமைக்கப்படுவதை 1978ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் பிகார் மாநிலத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தி சாத்தியமாக்கியது . சமூகநீதியைக் காப்பதில் தமிழகம் தடுமாறிக் கொண்டிருக்கும்  நிலையில், சமூகநீதியைக் காப்பதில் பிஹார் மாநிலம் மீண்டும் சாதித்திருக்கிறது.

44 ஆண்டுகளுக்கு முன்பு 1980ம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போது, அதில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஓவ்வொரு சமூகத்துக்கும் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான்” என்று அவர் கூறினார்.  

மேலும் இது தொடர்பாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறுகையில் “ சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமீக நீதி முழுமையடையாது என்பதை தி.மு.க உணர வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு உரிய கால அவகாசத்தை, அடுத்து வந்த திமுக அரசு நீட்டிக்காத காரணத்தால் அந்த ஆணையம் செயலிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திடங்களை  அனைத்துப் பிரிவினருக்கும் நியாயமாக சென்றடைவதை உறுதிபடுத்துவதற்காகவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 % இட ஒதுக்கீடு வழக்கில் வலுவான  ஆதரங்களை முன்வைப்பதற்காகவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு  அவசியமாகிறது.” என்று அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/after-bihar-data-caste-survey-demand-grows-in-tn-dmk-ally-1508578