சனி, 7 அக்டோபர், 2023

அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஈரானிய பெண்; யார் இந்த நர்கிஸ் முகம்மதி?

 Noble peace Prize

அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஈரானிய செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதி

பொறியாளராக இருந்து செயற்பாட்டாளராக மாறிய நர்கிஸ் முகம்மதி தற்போது ஈரானில் “அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்பினார்” என்ற குற்றச்சாட்டின் கீழ் வீட்டுத் தடுப்புக் காவலில் வசித்து வருகிறார். இவர் நோபல் பரிசு வரலாற்றில் பரிசு வழங்கப்படும் இரண்டாவது ஈரானிய பெண்மணி ஆவார்.

நார்வே நோபல் கமிட்டி ஈரானிய செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு 2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியது,  “ஈரானில் பெண்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிரான அவரது போராட்டம், மனித உரிமைகள், அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அவரது போராட்டத்திற்காக” நோபல் பரிசு வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோபல் கமிட்டியின் அறிவிப்பில், ஈரானின் கலாச்சாரப் போலீசாரின் காவலில் இருந்தபோது மஹ்சா அமினி என்ற இளம் பெண் கொல்லப்பட்டதற்கு எதிராக ஈரானில் கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களையும் நோபல் கமிட்டி குறிப்பிடுகிறது. ‘ஜான் – ஜென்டேகி – ஆசாதி (பெண் – வாழ்க்கை – சுதந்திரம்)’ என்ற போராட்டத்தின் பொன்மொழி, “நர்கிஸ் முகம்மதியின் அர்ப்பணிப்பையும் பணியையும் பொருத்தமாக வெளிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளது.

யார் இந்த நர்கிஸ் முகம்மதி?

1972-ல் ஈரானில் பிறந்த நர்கிஸ் முகம்மதி,  “அரசுக்கு எதிரான பிரச்சாரத்தைப் பரப்பினார், அவதூறு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தற்போது அங்கே  தடுப்புக் காவலில் வாழ்ந்து வருகிறார். முகம்மதியும் அவரது குடும்பத்தினரும் - ஈரானியப் புரட்சியில் தொடங்கி நீண்டகாலமாக அரசியல் எதிர்ப்புகளில் ஈடுபட்டுள்ளனர். 1979-ம் ஆண்டு இயக்கத்தின் முடிவில் முடியாட்சி வீழ்ச்சியடைந்தது, ஈரான் ஒரு இஸ்லாமிய குடியரசாக மாறியது.

நர்கிஸ் முகம்மதி இந்த ஆண்டு நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், இரண்டு குழந்தை பருவ நினைவுகள் செயல்பாட்டிற்கான பாதையில் அவரை அழைத்துச் சென்றது என்று கூறினார். அவரது தாயார் சிறைச்சாலையில் தனது சகோதரரை சந்தித்தார், ஒவ்வொரு நாளும் தூக்கிலிடப்படும் கைதிகளின் பெயர்களை தொலைக்காட்சியில் பார்க்கும் அறிவிப்புகளைப் பார்த்தார் என்று நினைவுகூர்ந்தார்.

காஸ்வின் நகரில் அணு இயற்பியலைப் படிக்கச் சென்றார். அங்கே, அவர் தனது வருங்கால கணவர் தாகி ரஹ்மானை சந்தித்தார், அவர் அரசியல் ரீதியாகவும் தீவிரமாக உள்ளார். அவர் ஈரானில் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார், தற்போது இந்த தம்பதியரின் இரண்டு குழந்தைகளுடன் நாடு கடத்தப்பட்டு பிரான்சில் வசிக்கிறார்.

அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “இந்த உயர்ந்த மரியாதையை அவருக்கு வழங்கியதற்காக நோபல் அமைதிக் குழுவிற்கு தங்கள் ஆழமான நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம்” என்று கூறியுள்ளனர். “எல்லா ஈரானியர்களுக்கும், குறிப்பாக சுதந்திரம் மற்றும் சமத்துவத்துக்காகப் போராடி உலகையே தன் துணிச்சலால் கவர்ந்த ஈரானின் தைரியமான பெண்கள், சிறுமிகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறோம்... நர்கிஸ் முகம்மதி எப்போதும் சொல்வது போல்: வெற்றி எளிதானது அல்ல, ஆனால் அது நிச்சயம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செயல்பாட்டாளராக மாறிய நர்கிஸ் முகம்மதி

நர்கிஸ் முகம்மதி ஒரு இளம் பெண்ணாக இருந்து, ஈரானிய பெண்களின் உரிமைகள் தொடர்பான போராட்டங்கள்ல் ஈடுபட்டுள்ளார், மரண தண்டனை, அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு மற்ற வகையான கடுமையான தண்டனைகளுக்கு எதிராக, உள்ளூர் செய்தித்தாள்களில் அவர்களைப் பற்றி எழுதியுள்ளார். அவரும் அவரது கணவரும் தெஹ்ரானில் வசிக்கச் சென்றனர், அங்கே அவர் ஒரு நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்தார், ஆனால், சில காலத்திற்குப் பிறகு அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

டியூட்ஸ் வேள் (DW) செய்தியின்படி, “2000-களில், ஈரானில் உள்ள மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான மையத்தில் அவர் சேர்ந்தார், இது ஈரானிய வழக்கறிஞர் ஷிரின் எபாடியால் மரண தண்டனையை ஒழிப்பதற்காக நிறுவப்பட்டது. தற்செயலாக, எபாடிக்கு 2003-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளது.

நர்கிஸ் முகம்மதியின் முதல் கைது 2011-ல் நடந்தது. நியூயார்க் டைம்ஸ்' செய்தி கூறியது:  “நீதித்துறை திருமதி முகம்மதியை ஐந்து முறை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது, 13 முறை கைது செய்துள்ளது மற்றும் மொத்தம் 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 154 கசையடிகள் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அவருக்கு எதிராக மூன்று கூடுதல் நீதித்துறை வழக்குகள் திறக்கப்பட்டன, இது கூடுதலாக தண்டனைகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவரது கணவர் கூறினார்.” என்று குறிப்பிட்டுள்ளது.

சிறையில் இருந்தபோதும், சக பெண் கைதிகளுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார். 2022-ம் ஆண்டில், மாரடைப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் வீட்டில் இருந்தபோது அவரது புத்தகம் 'வெள்ளை சித்திரவதை' வெளியிடப்பட்டது. இது தனிமைச் சிறையில் இருந்த வாழ்க்கையின் விவரம் மற்றும் தண்டனைக்கு உள்ளான மற்ற ஈரானிய பெண்களுடன் நேர்காணல்களை உள்ளடக்கியது.

முந்தைய விருதுகளும் அங்கீகாரமும்

மே, 2023-ல் 2023 பென்/பார்பே எழுத்துச் சுதந்திரம் விருது (PEN/Barbey Freedom to Write Award) மற்றும் 2023-ல் யுனெஸ்கோ குயில்லெர்னோ கேனோ உலக பத்திரிகைச் சுதந்திரத்திற்கான விருது (2023 UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) போன்ற மேலை நாடுகளில் முகம்மதி தனது பணிகளுக்காக முக்கிய பரிசுகளையும் பெற்றுள்ளார். 2022-ம் ஆண்டில், பி.பி.சி-யின் உலகெங்கிலும் உள்ள 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலில் இடம்பெற்றார்.

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதல் ஈரானியப் பெண்மணி, ஷிரின் எபாடி,  “ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அவரது முயற்சிகளுக்காக நோபல் பரிசு பெற்றார் என்று நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது. எபாடி ஈரானின் முதல் பெண் நீதிபதிகளில் ஒருவர், அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்ட மக்களைப் பாதுகாக்கத் தொடங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான பணிகளுக்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நோபல் கமிட்டி மேலும் குறிப்பிட்டுள்ளது:  “எபாடியைத் தேர்ந்தெடுத்ததில், நோபல் கமிட்டி செப்டம்பர் 11, 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய உலகங்களுக்கு இடையிலான பதட்டங்களைக் குறைக்க விரும்புகிறது. புவிசார் அரசியல் பதட்டங்களை பிரதிபலிக்கும் வகையில், கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி, ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்டீஸ் மையம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.” என்று குறிப்பிடுள்ளது.


source https://tamil.indianexpress.com/explained/nobel-prize-for-peace-prize-2023-narges-mohammadi-iranian-woman-1513419