ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

ஜவுளித் துறையை அழித்துவிடும்'... இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

 14 2 2026

Rahul Gandhi

'ஜவுளித் துறையை அழித்துவிடும்'... இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தம் இந்திய ஜவுளித்துறையை "முற்றிலும் அழித்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட ராகுல் காந்தி, நாட்டு நலனுக்காக செயல்படும் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட அரசு, பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இருவரின் நலனையும் பாதுகாத்து, அவர்களின் செழிப்பை உறுதி செய்யும் ஒப்பந்தத்தையே பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்தியிருக்கும் என்று கூறினார். ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. நரேந்திர 'சரண்டர்' மோடியும், அவரது அமைச்சர்களும் இரு துறைகளுக்கும் ஆழமான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளனர் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்தத் துறையில் வங்கதேசம் இந்தியாவின் போட்டியாளராக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய ராகுல், "வங்கதேசத்திற்கு 0 சதவீத வரி (Zero per cent tariff) மற்றும் இந்தியாவிற்கு 18% வரி என்ற நிலை உள்ளதால், இத்துறையை நம்பியிருக்கும் 5 கோடி குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.


மோடிஜி கையெழுத்திட்ட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இத்துறையை அழித்துவிடும். இதைப் பற்றி தேசம் முழுவதற்கும் தெரியும், மோடிக்கும் தெரியும். வங்கதேசத்திற்கு இலவச அனுமதி - 0 சதவீத வரியும், இந்தியாவிற்கு 18% வரியும் வழங்கப்பட்டுள்ளதாக நான் நாடாளுமன்றத்தில் விளக்கினேன். வங்கதேச ஜவுளித்துறை, இந்திய ஜவுளித்துறையை அழித்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

மத்திய அரசின் இடைக்கால இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். புதன்கிழமை மக்களவையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, அவரது பேச்சு இந்த ஒப்பந்தத்தின் விவரங்களை சுற்றியே அமைந்து இருந்தது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் (மத்திய அமைச்சர்) ஹர்தீப் பூரி மற்றும் (தொழிலதிபர்) அனில் அம்பானி பெயர்கள் இடம்பெற்றுள்ளதாலும், அமெரிக்காவில் தொழிலதிபர் கௌதம் அதானி மீதான வழக்கு நிலுவையில் இருப்பதாலும் பிரதமர் மீது அழுத்தம் இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஹர்தீப் பூரி, தவறு எதையும் செய்யவில்லை என்று மறுத்ததுடன், அந்த குற்றச்சாட்டுகளை "அடிப்படையற்றது", "உளறல்", "சூசகம்" மற்றும் "அவதூறு பிரச்சாரம்" என்று நிராகரித்தார். ஜவுளித்துறைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காந்தி பேசியதற்கு ஒரு நாள் கழித்து கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், அடுத்த மாதம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில், குறிப்பிட்ட அளவிலான இந்திய ஜவுளி மற்றும் ஆடைகளை அமெரிக்காவிற்கு பூஜ்ஜியம் சதவீத வரியில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் விதிமுறைகள் இருக்கும் என்று கூறினார்.

சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "வங்கதேசத்திற்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகை" குறித்து நாடாளுமன்றத்தில் தான் எழுப்பிய கேள்விக்கு, அமெரிக்காவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்தால் இந்தியா இதே பலனைப் பெறலாம் என்று மோடி அரசின் அமைச்சர் பதிலளித்ததாக காந்தி கூறினார்.

"இந்த உண்மை இதுவரை ஏன் நாட்டிலிருந்து மறைக்கப்பட்டது?" என்று கேள்வி எழுப்பிய காந்தி, இந்தியக் கொள்கையை ஒரு "பொறி" (Trap) என்று வர்ணித்தார். "நாம் அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்தால், நம் சொந்த விவசாயிகள் அழிந்துபோவார்கள். இறக்குமதி செய்யாவிட்டால், நம் ஜவுளித்துறை பின்தங்கி அழிந்துவிடும்," என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவிடமிருந்து பருத்தி இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்ள அல்லது நிறுத்திவிட வங்கதேசம் சமிக்ஞைகளை அளித்து வருவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

source https://tamil.indianexpress.com/india/its-a-trap-rahul-gandhi-says-new-us-trade-deal-will-destroy-indias-textile-industry-11107102