மாநிலங்களவையில் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீதான விவாதத்தின்போது, தமிழ்நாட்டின் கடன் நிலை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டின் கடன் சுமார் 4.56 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன், கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தி.மு.க ஆட்சியின் கீழ் மிகக்குறுகிய காலத்தில் கடன் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 73 ஆண்டுகளில் மொத்தக் கடன் சுமார் 5 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2021-க்குப் பிறகு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.4.56 லட்சம் கோடியாக அது உயர்ந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டின் கடன் சுமை இவ்வளவு அதிகமாக இருக்கும் நிலையில், மத்திய அரசு மீது விமர்சனம் செய்யலாமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு இடையே குறிக்கிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். "இது மத்திய பட்ஜெட் உரையா அல்லது தமிழ்நாடு பட்ஜெட் உரையா?" என்று கார்கே கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதை மனதில் வைத்தே மத்திய நிதி அமைச்சர் இங்கு அரசியல் பேசுவதாக அவர் குற்றம் சாட்டினார். மத்திய அரசின் பட்ஜெட் விவாதத்தில் மாநில அரசின் நிதி விவகாரங்களைக் கொண்டு வருவது நியாயமற்றது என்று அவர் வாதிட்டார். இந்த விவாதமானது மாநிலங்களவையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
source https://tamil.indianexpress.com/india/nirmala-sitharaman-accuses-tamil-nadu-government-of-increasing-debt-by-456-lakh-crore-in-rajya-sabha-congress-leader-mallikarjun-kharge-hits-back-11101484





