/indian-express-tamil/media/media_files/2026/02/12/strike-2026-02-12-07-58-12.jpg)
மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நாடு தழுவிய போராட்டத்தில் மின் விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு மற்றும் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளைச் சேர்ந்த சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகள் கணிசமாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
12 2 2026
இந்த வேலைநிறுத்தத்தை .ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.யு.டி.ஐ.சி, டி.யு.சி.சி(INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC) உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் முன்னின்று நடத்துகின்றன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதே இவர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. மேலும், வரைவு விதை மசோதா மற்றும் மின்சார சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அணுமின் உற்பத்தியில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தத் துறையினரும் இந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி (AITUC) பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர் கூறுகையில், மத்திய அரசு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தேசிய நலன்களுக்கு எதிரான கொள்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு தி.மு.க தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் நடைபெறும் இந்தப் போராட்டத்தை வரவேற்பதாக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நிலை:
தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, நடைபெறவுள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தனது ஆதரவை வழங்கியுள்ளது. இதன் காரணமாக, வங்கிப் பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் காசோலைகளைக் கையாளுதல் மற்றும் நேரடி வங்கிச் சேவைகள் ஆகியவற்றில் பெரும் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி அன்றைய தினத்தைப் பொது விடுமுறையாக அறிவிக்காத காரணத்தால், சட்டரீதியாக வங்கிக் கிளைகள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்க, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சார்ந்த தேவைகளை முன்னதாகவே திட்டமிட்டு முடித்துக்கொள்ள வேண்டும் என வங்கிகள் கேட்டுக்கொண்டுள்ளன.
மற்றொரு புறம், அரசு ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதைத் தவிர்க்கும் வகையில் அரசு கடும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, பணியாளர்கள் பணிக்கு வராமல் போனால் 'வேலை இல்லை எனில் ஊதியம் இல்லை' என்ற அடிப்படையில் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் எவ்விதத் தடையுமின்றி கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதையொட்டி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் துறை சார்ந்த தலைவர்களும் ஊழியர்களின் வருகையை உறுதிப்படுத்தத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/india/nationwide-general-strike-essential-services-likely-to-be-affected-11098682





