ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

டி.என்.ஏ ஆய்வில் உடைந்த 4,500 ஆண்டுகால மர்மம்!

 

Bell Beaker

ஐரோப்பாவின் மொழியை மாற்றிய இனம்... டி.என்.ஏ ஆய்வில் உடைந்த 4,500 ஆண்டுகால மர்மம்!

சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பா மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்தது. அதுவரை அங்கு வாழ்ந்த மக்களை புதிய இனம் அப்படியே அப்புறப்படுத்தியது. அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? இன்று நாம் பேசும் மொழிகளுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? சமீபத்திய டி.என்.ஏ ஆய்வுகள் சொல்லும் ஆச்சரியமான தகவல்கள் பற்றி பார்ப்போம்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இவர்களை 'பெல் பீக்கர்' (Bell Beaker) கலாச்சாரம் என்று அழைக்கிறார்கள். இவர்கள் சிறந்த வில்வித்தை காரர்களாகவும், உலோக வேலைப்பாடுகளில் வல்லுநர்களாகவும் இருந்தனர். இவர்களது கல்லறைகளில் விசித்திரமான பொருள் எப்போதும் இருக்கும். அதுதான் மணி வடிவிலான குடிநீர்க் கோப்பை. இதனாலேயே இவர்களுக்கு இந்தப் பெயர் வந்தது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மரபணுவியலாளர் டாக்டர் இனிகோ ஓலால்டே தலைமையிலான குழு, 8,500 BC முதல் 1700 BC வரை வாழ்ந்த 112 நபர்களின் டின்.என்.ஏ-வை ஆய்வு செய்தது. 

இந்த கலாச்சாரம் நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியின் சில பகுதிகளை உள்ளடக்கிய ரைன்-மியூஸ் நதிப் பள்ளத்தாக்குகளில் உருவானது. கிழக்கிலிருந்து (இன்றைய உக்ரைன் பகுதி) வந்த 'ஸ்டெப்பி' (Steppe) புல்வெளி மக்களும், அங்கு ஏற்கனவே வாழ்ந்த வேட்டைச் சமூகத்தினரும் ஒன்றிணைந்த இடமாக இது இருந்தது.

பொதுவாக, துருக்கியிலிருந்து வந்த விவசாயிகள் ஐரோப்பாவிற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த பழைய வேட்டைச் சமூகத்தினரை அழித்து விட்டுத்தான் முன்னேறினார்கள். ஆனால், நெதர்லாந்தின் சதுப்பு நிலங்களில் மட்டும் ஒரு அதிசயம் நடந்தது. அங்குள்ள வேட்டைக்காரர்கள் சுமார் 3,000 ஆண்டுகள் வரை விவசாயிகளின் ஆதிக்கத்திற்கு அடிபணியாமல் தங்களைத் தக்கவைத்துக்கொண்டனர். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த 2 குழுக்களுக்கும் இடையே நடந்த திருமண உறவுகளில், பெரும்பாலும் விவசாயிகளின் பெண்களே வேட்டைக்காரர்கள் சமூகத்திற்குள் வந்துள்ளனர். இதை அவர்களின் X-குரோமோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ உறுதிப்படுத்துகிறது.

4,500 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பெல் பீக்கர் மக்கள் இங்கிலீஷ் சேனலை கடந்து பிரிட்டனுக்குள் நுழைந்தனர். அடுத்த சில நூற்றாண்டுகளில் ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge) போன்ற பிரம்மாண்ட பாறைகளை எழுப்பிய பழைய விவசாயிகளைத் துரத்திவிட்டு, பிரிட்டனின் 90% மரபணு வரைபடத்தையே மாற்றி எழுதினார்கள். இன்று உலகில் பாதி மக்கள் பேசும் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் (ஆங்கிலம், லத்தீன், சமஸ்கிருதம் போன்றவை) இவர்களால் தான் பரப்பப்பட்டது. உதாரணமாக, தாய் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் 'Mother', லத்தீனில் 'Mater', சமஸ்கிருதத்தில் 'Matr' என ஒற்றுமை இருப்பதற்கு இவர்களே காரணம்.

இந்த மக்கள் எப்படி இவ்வளவு வேகமாக ஐரோப்பாவை ஆக்கிரமித்தார்கள் என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. கி.மு. 2800 வாக்கில் ஐரோப்பாவைத் தாக்கிய பிளேக் நோயிலிருந்து இவர்களுக்கு ஓரளவு எதிர்ப்பு சக்தி இருந்திருக்கலாம். இவர்கள் கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்கியதால், அதிகப்படியான புரதம் (குறிப்பாக பால்) இவர்களுக்குக் கிடைத்தது. இது அவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் ஆரோக்கியமாக வளர உதவியது.

பெல் பீக்கர் மக்களின் வருகை என்பது வெறும் ஆக்கிரமிப்பு மட்டுமல்ல; அது ஐரோப்பாவின் கற்காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, வெண்கலக் காலத்தை (Bronze Age) தொடங்கி வைத்தது. தொழில்நுட்பம், மொழி மற்றும் கலாச்சார ரீதியாக இன்று நாம் பார்க்கும் நவீன ஐரோப்பாவிற்கு இவர்களே அஸ்திவாரம் போட்டனர்.


source https://tamil.indianexpress.com/international/how-the-bell-beaker-people-reshaped-europe-new-dna-study-unlocks-prehistoric-secrets-the-mystery-of-stonehenge-builders-11107340