...............
பலாப்பழம் மூலம் ஐஸ்கிரீம், சிப்ஸ், ஜாம், மாவு உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க முன் வரவேண்டும் என வேளாண்மை துணை இயக்குனர் தொழில் முனைவோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பண்ருட்டி என்றாலே நினைவிற்கு வருவது பலாப்பழம்தான். "தானே' புயலுக்குப் பின் இந்த ஆண்டு, எதிர்பார்த்த அளவில் பலா உற்பத்தி அதிகமாகி தற்போது விவசாயிகளின் பணப்பயிராக உள்ளது. விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பலா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பலா மூலம் பதப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்து சந்தைப்படுத்த யாரும் முன் வரவில்லை.பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பிஞ்சு, இளம்காய், பாதி முற்றிய காய், முற்றாத காய், நன்கு முற்றிய காய், பலாப்பழம், பலாக்கொட்டை, பலா சக்கை, பலாச்சுளை ஆகியவற்றிலிருந்து 100க்கும் மேற்பட்ட உணவு தயாரிப்புகள் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தயாரித்து உண்ணும் பழக்கம் அதிகளவில் உள்ளது.
தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளில் 30க்கும் மேற்பட்ட பதப்படுத்தப்பட்ட பலா உணவுகள் பைகள், பாட்டில்களில் அடைக்கப்பட்டு அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.ஆனால், இந்தியாவில் நாம், பலாவில் இருந்து சீசன் நாட்களில் பலாச்சுளையை மட்டும் ருசிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளோம். பதப்படுத்தி உண்ணும் முறை இல்லை. இலங்கையில் பலாக்கறி உணவுகள் முக்கிய உணவாக உள்ளது. பலாவில் இருந்து பல்வேறு உணவு வகைகளை தயாரிக்கலாம்.உதாரணமாக, பலாப்பிஞ்சு, இளம்காய் ஆகியவற்றை மரக்கறியாக உண்ணலாம். பதப்படுத்தி புட்டிகளில் அடைத்து உடனடி சமைக்கும் வடிவில் சந்தைப்படுத்தலாம்.பாதி முற்றிய காய் மற்றும் முற்றாத காயிலிருந்து சிப்ஸ், கட்லெட், பிரியாணி, குருமா அளவில் தயாரிக்கலாம். நன்கு முற்றிய காயிலிருந்து மஞ்சூரியன், உலர்ந்த பலாச்சுளை, அடை, பப்படம், ஆப்பம், தோசை, இட்லி, பலாச்சுளை பவுடர், ஊறுகாய் தயாரிக்கலாம்.
பழுத்த சுளையில் இருந்து அல்வா, வராட்டி, ஜூஸ், ஐஸ்கிரீம், கலவைப்பழ ஜூஸ், ஜாம், மில்க்ஷேக், மிட்டாய் வகைகள், பாயாசம், பேக்கரி வகைகள், பலாப்பழப்புட்டு, பலாப்பழ கொழுக்கட்டை, தேனில் ஊறிய பலாச்சுளை, மோதகம் எனப்படும் எண்ணெய் பலகாரம் தயாரிக்கலாம். பலா சக்கையிலிருந்தும், பலாச்சுளையிலிருந்தும் பலாக்கூழ் எடுத்து ஜாம், குல்பி போன்ற இனிப்பு பண்டங்கள் தயாரிக்கலாம். பலாச்சுளையினை பதப்படுத்தி ஒயின் தயாரிக்கலாம். பலாக்கொட்டையினை பதப்படுத்தி காய்கறிக்கு மாற்றாக பலாக்கொட்டை மாவு தயாரித்து பகோடா முறுக்கு, மிட்டாய், வடை, பலாக்கொட்டை அல்வா, மைதா மற்றும் கோதுமை மாவுடன் கலந்த சப்பாத்தி, ரொட்டி, பேக்கரி தயாரிப்புகள் செய்யவும், உப்புமா செய்யவும், அவியல், பொறியலாகவும் பயன்படுத்தலாம்.பலா உணவுகளில் 10 சதவீதத்திற்கு மேல் மாவு சத்து, 2 சதவீதம் புரதசத்து சிறதளவு கொழுப்பு, மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்பு ஆகிய தாது பொருட்கள் நார் சத்துகளும், வைட்டமின் ஏ, பி, சி போன்ற உடல் நலம் காக்கும் உணவு சத்துகள் உள்ளன.
நீரிழிவு நோயாளிகள் பலாப்பிஞ்சு, முற்றாத காய்களை அவியல், பொறியல், குருமா செய்து சாப்பிடலாம். ரத்த அழுத்த நோயாளிகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க பலாக்காய் மற்றும் பலா கொட்டைகளை அதிகமாக உண்ணலாம். பலாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஜாக்குலின் எனப்படும் பொருள் புற்றுநோய் தீவிரத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.தொழில் முனைவோர்கள் பலாப்பழம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க முன் வரவேண்டும். அப்படி முன் வந்தால் பலாப்பழ விவசாயிகள் பொருளாதாரத்தில் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. தொழில் முனைவோர்கள் இது குறித்து தகவல்கள் பெற 94430 74620 மொபைல் எண்ணில் வேளாண்மை துணை இயக்குனர் ஹரிதாசை தொடர்பு கொள்ளலாம்.