செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

எந்த இணைய சேவைக்கும் கட்டண வசூலில் பாரபட்சம் காட்ட தடை.

பேஸ்புக், வாட்ஸ்-அப் உட்பட எந்த இணைய சேவைக்கும் கட்டண வசூலில் பாரபட்சம் காட்ட தடை.
* இணைய சமநிலைக்கு ஆதரவாக டிராய் உத்தரவு
* இலவச சேவை வழங்குவதும் விதிமீறல்தான்
* தவறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம்
புதுடெல்லி: இணைய சேவை வழங்குவதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாரபட்சம் காட்டக்கூடாது என டிராய் உத்தரவிட்டுள்ளது.சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கு வழக்கமான இணையதள பேக்கேஜ் அல்லாமல் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. சில நிறுவனங்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் பயன்படுத்துவதை இலவச சேவையாக அளிக்கின்றன. இவை இரண்டுமே இணைய சமநிலைக்கு எதிரானது என எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கருத்துக்களை கேட்டிருந்தது. இதுபற்றி டிராய் இரண்டு முறை வரைவு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இதன்மீது 16 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துக்கள் குவிந்தன. அதோடு திறந்தவெளி கூட்டம் நடத்தியும் கருத்து கேட்கப்பட்டது.
இந்நிலையில், இணையதள கட்டணம் வசூலிப்பதில் பாகுபாடு கூடாது என டிராய் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணையதளம் பயன்படுத்துவதற்கான கட்டணம் வசூலிப்பதில் வேறு பட்ட கட்டணங்கள் நிர்ணயம் செய்யக்கூடாது. எல்லாவித சேவைக்கும் ஒரே மாதிரியான கட்டணம்தான் வசூலிக்க வேண்டும். சில இணைய பக்கங்களை அல்லது வலைதளங்களை பயன்படுத்துவதற்கு என தனி கட்டணம் நிர்ணயிப்பது தவறு. இதுபோல், சில இணையதளங்களை பயன்படுத்துவதை இலவசமாகவும் அறிவிப்பது கூடாது. இவ்வாறு பாரபட்சம் காட்டுவது இணைய சமநிலைக்கு எதிரானது.
எனவே, எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமும் யாருடனும் சாதாரணமாகவோ, சட்ட ரீதியிலாகவோ இலவச சேவை தருவதாக இணையசமநிலையை பாதிக்கும் வகையில் எந்த ஒப்பந்தமும் செய்யக்கூடாது. இதுபோல், குறிப்பிட்ட இணையதளத்துக்கு அல்லது சேவைக்கு சிறப்பு கட்டணம் வசூலிக்கவும் கூடாது.அதேநேரத்தில், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அவசர சேவையாக வழங்கும் பட்சத்தில் கட்டணங்களை குறைத்து வசூலிக்கலாம். அவசர சேவை பற்றிய விளக்கத்தை நாங்கள் இன்னும் வரையறுக்கவில்லை.
இருப்பினும், இத்தகைய சேவை அளிப்பது குறித்து 7 வேலை நாட்களுக்குள் டிராய்க்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தகவல் தரவேண்டும் என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார்.
பாகுபாடான இணையசேவை கட்டண தடுப்பு ஒழுங்குமுறை விதி 2016ன்படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. புதிய விதிகள் கெஜட்டில் வெளியிடப்படும் என டிராய் தெரிவித்துள்ளது. டிராயின் முடிவுக்கு பேஸ்புக் வருத்தம் தெரிவித்துள்ளது.