சாதிவெறி பிடித்த நாடு இந்தியா – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் ஆவேசம்
“சாதிவெறி பிடித்த நாடு இந்தியா… அந்த நாட்டில் நான் இருக்க கொஞ்சமும் விரும்பவில்லை..!” என்று சொல்லி அதிர்ச்சிகிளப்பியிருக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன்.
சமீபத்தில் கர்ணனை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி வெளியிட்ட உத்தரவின் மீது நீதிபதி கர்ணன் தடை விதித்தார். அத்தோடு நீதி பரிபாலனத்தில் யாரும் தலையிடக் கூடாது என்றும், பணியிட மாற்றம் தொடர்பான ஆவணங்களுடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதிலளிக்க வேண்டும் என்றும் அவருக்கு கர்ணன் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த சம்பவம் இந்திய அளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து இன்று பிற்பகல் பத்திரிகையாளர்களை சந்தித்த நீதிபதி கர்ணன், தன் மீதான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “இங்கே ஆதிக்க சாதியினர் அனைத்துத் துறையினிலும் அமர்ந்து கொண்டு சாதிய ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா சாதிவெறி பிடித்த நாடாக மாறிக் கொண்டு வருகிறது. இந்த சாதி வெறி பிடித்த நாட்டில் நான் இருக்க விரும்பவில்லை!” என்று கூறினார்.
நீதிமன்றப் பணிகள் எதையும் நீதிபதி கர்ணனுக்குத் தரவேண்டாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் ஆர்டர் சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் கர்ணண் தரப்பில் ஆஜராகி வாதாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.