செவ்வாய், 12 ஏப்ரல், 2016

மருத்துவப் பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு நடத்த சாத்தியமில்லை

மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு சாத்தியமில்லை என இந்திய மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவர் பிரம்மானந்தம் கூறியுள்ளார். 

பொது நுழைவுத் தேர்வின் மூலமே MBBS, BDS, MD படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் கடந்த 2011ம் ஆண்டு  வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள், மருத்துவ கல்லூரிகள், பொது நல அமைப்புகள் என 115  மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

இதனை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு, கடந்த 2013 ஆம் ஆண்டு, பொது நுழைவுத் தேர்வு நடத்த இடைக்காலத் தடை விதித்தது. மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பு அரசியல் சட்டத்தை மீறுவதாகவும், மாநில உரிமைகளில் தலையிடுவதாகவும்  தெரிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு , இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் ஆகியவை சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தன, இந்த மனு மீதான விசாரணை, அனில் R. தவே, சிக்ரி, R.K.அகர்வால், A.K. கோயல், R. பானுமதி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத்தடையை நீக்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

அதே நேரத்தில், இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பு செல்லுமா, செல்லாதா என்பது குறித்து 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து விசாரிக்கும் என்றும் தெரிவித்தது. இந்த ஆண்டிற்கான பொது தேர்வு நடத்துவது தொடர்பாக இடைகால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும், அதனை இந்திய மருத்துவ கவுன்சிலே முடிவு செய்யும் எனவும் அறிவித்தனர். 

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த இந்திய மருத்துவக் கவுன்சில் துணைத் தலைவர் டாக்டர் சி.வி.பிரம்மானந்தம், இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு நடத்த சாத்தியம் இல்லை என்று ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.