சனி, 9 ஏப்ரல், 2016

கிறிஸ்தவ தேவாலயம் அருகே மர்ம நபர்கள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு


bomb_9
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய பிரார்த்தனை கூடத்தின் அருகில் மணலுக்குள் புதைக்கப்பட்டிருந்த 9 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய பிரார்த்தனை கூடத்திற்கு அருகிலுள்ள மணற்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சேலையால் மூடப்பட்ட நிலையில் ஒரு மண்பானை காணப்பட்டது. 

இதனை கண்ட பொதுமக்கள் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். இது பற்றி குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் சோதனையிட்டபோது 9 வெடிகுண்டுகள் மணலுக்குள் பானையில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் திருநெல்வேலியிலிருந்து வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.