500. 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி மேற்கொண்டார் என்றால், யாரோ கிளப்பி விட்ட வதந்தியால் தற்போது 10 ரூபாய் நாணமும் மதிப்பிழந்து போயிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் காஞ்சிபுரம் மக்கள்.
நவம்பர் 8 ஆம் தேதி முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் மாற்றுவது மற்றும் ‘டெபாசிட்’ செய்வது என மக்கள் வங்கிகளுக்கு அலைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். புதிய 2,000 ரூபாய் வெளியிட்ட மறுநாளே அதே மாதிரியான போலி ரூபாய் நோட்டுகள் வெளி வந்தன. அதே போல், 10 ரூபாய் நாணயமும் போலியாக புழக்கத்தில் விடப்பட்டதாக பரவிய வதந்தியை அடுத்து கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என வதந்திகள் பரவியதால் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்கவில்லை. தற்போது அந்த வதந்தி காஞ்சிபுரத்திற்கும் பரவியுள்ளது.
December 21, 2016 - 06:19 PM