சனி, 27 மே, 2017

கேரளாவில் 1 முதல் 7-ம் வகுப்பு வரை ‘டிஜிட்டல் வழிக் கற்றல்’… ‘ஸ்மார்ட் வகுப்பறைகள்’, கம்ப்யூட்டர் லேப்…!


கேரள மாநிலத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை ‘டிஜிட்டல் வழிக் கற்றல்’ முறை கொண்டு வரப்படுகிறது. இதற்காக அனைத்து வகுப்பறைகளும் கம்ப்யூட்டர் மயத்துடன், ஸ்மார்ட்‘ க்ளாஸ் ரூம்’ களாக மாற்றப்படுகின்றன. 
இது தொடர்பாக கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சி. ரவிந்திரநாத் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது-
 ‘ஐ.டி.@ஸ்கூல் புராஜெக்ட்’ என்ற பெயரில்,  தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் முறையில் பாடம் கற்பித்தல் முறை,  1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை 9 ஆயிரத்து 279 பள்ளிகளில் வரும் ஜூன் 1-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 
நாட்டுக்கே முன்னுதாரணமாக நிகழும் கேரள மாநிலம் கடந்த 2005ம் ஆண்டே 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.  இப்போது, தொடக்க மற்றும் உயர் தொடக்க பள்ளிகளிலும் அதாவது 1-ம் வகுப்பு முல் 12-ம் வகுப்பு வரை தகவல் தொழில்நுட்ப கற்பித்தலை கொண்டு வர இருக்கிறோம். 
5-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை ஏற்கனவே ஸ்மார்ட் பாடப் புத்தகங்களான டிவிடிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக தொடக்கப் பள்ளிகள், மற்றும் உயர் தொடக்க பள்ளிகளில் கணினி ஆய்வகங்களும், ஸ்மார்ட் க்ளாஸ் ரூம்களும் உருவாக்கப்பட்டுவிட்டன.  இணையதளம் இணைப்புக்காக பி.எஸ்.என்.எல். நிர்வாகத்துடன் ஒப்புந்தம் செய்துள்ளோம். 
மாணவர்களுக்காக தகவல் தொழில்நுட்ப பாடப்புத்தகங்களான ‘இ@வித்யா’ என்ற பாடங்களும் தொகுக்கப்பட்டு டிவிடி வடிவில் வழங்கப்படும். இது மலையளம், ஆங்கிலம், தமிழ், கன்னடம் மொழிகளில் இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.